What I liked in Tamil Litrature

Post Reply
vallknowme
Posts: 98
Joined: 14 Aug 2013, 22:17

Re: What I liked in Tamil Litrature

Post by vallknowme »

Beautiful writing Venkatakailasam.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: What I liked in Tamil Litrature

Post by venkatakailasam »

A story which I liked..written by எஸ்.பரமஜோதி....

The Crux " தேவைகள் தீர்ந்து போனதா சரித்திரம் இல்ல; தேவைகளை நாம தான் தீர்த்துக்கணும். கோடி ரூபாய்க்கு அதிபதியா வாழ்றவன், பணக்காரன் இல்ல; தன்னோட ஆசைங்கிற யானைக்கு, அங்குசத்தை மாட்டிட்டு நிம்மதியா வாழ்றவன் தான் பணக்காரன்...."

read the story....

அதிகாலை பனிக்காற்று, திம்மென்று முகத்தில் வந்து மோதியது ஜெயராமிற்கு சுகமாய் இருந்தாலும், மனசு புழுங்கித் தவித்தது.
காலை 5:00 மணிக்கே பீச் ரோட்டில் ஜாகிங் போவதற்காக, காரை எடுத்து கிளம்பி விட்டார் ஜெயராம். அவரைப் போலவே சிலர், தங்கள் பீர் தொப்பையை குறைக்க, மாங்கு மாங்கு என்று ஓடியபடி இருந்தனர்.
அருகம்புல் ஜூஸ் குடித்து, ஆர்பரிக்கும் அலைகளை வேடிக்கை பார்க்கத் துவங்கினார் ஜெயராம். எத்தனை முறை பார்த்தாலும், அலுக்காத சமுத்திரம் இன்றும் அழகாய்த் தான் இருந்தது.
'நுாத்தம்பது கோடி... அவ்வளவையும் அடுக்கி வச்சா, எவ்வளவு நீளம் இருக்கும்ன்னு உங்களால கற்பனை செய்ய முடியுதா மிஸ்டர் ஜெய்... இந்த திட்டம் ஓ.கே., ஆனா, ஒரு ஆண்டுல கிடைக்க போற லாபம் இது...' என்று, சேர்மன் சூசை அற்புதராஜ் சொன்ன வார்த்தைகள், மனசுக்குள் ஓடியது.
வேகம்... வேகம்... ஓட்டம்... ஓட்டம்... என்று வாழ்க்கை தலைதெறிக்க ஓடியது 20 ஆண்டுகளுக்கு முன், திருவல்லிக்கேணியில், ஒண்டுக் குடித்தன வாழ்க்கை நடத்தியவர் தான் ஜெயராம்.
இருபது ஆண்டு என்பது, தனிப்பட்ட வாழ்க்கையில் வேண்டுமானால், மிகப் பெரிய அளவீடாக இருக்கலாம். ஆனால், சமூகப் பார்வையில், 20 ஆண்டு இடைவெளியில் இத்தகைய வளர்ச்சி என்பது அபரிமிதமாய் தோன்றியது.
ஆனால், இதெல்லாம் வெளி உலகத்திற்கு தான். உள்ளுக்குள் மனசும், உணர்வும் ஒருவித தவிப்பில் இருந்தது.
''சார்... எப்படி இருக்கீங்க... வூட்ல அம்மா, புள்ளைங்க எல்லாரும் சவுக்கியமா...''
கொஞ்சம் தடித்திருந்த கட்டைக்குரல் பரிச்சயமானதாய் தோன்ற, சட்டென்று திரும்பி பார்த்தார்; அம்புலி நின்றிருந்தான்.
லுங்கி, கறுப்பு சட்டை, நிறம் மாறியிருந்த அடர்ந்த சுருள்முடியுடன், வரிசைப் பல் தெரிய முகம் மலர சிரித்தான். ஜெயராமின் முகமும், நிஜமான மகிழ்ச்சியை பிரசவித்தது. அது, 20 ஆண்டு நட்பின் மிச்சம்.
மீரான் சாகிப் தெருவில், சிறிய வீட்டில் குடியிருந்த சமயம் அது. ஜெயராமின் இரு குழந்தைகளும், பிரைமரி வகுப்புகளில் படித்த போது, அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வான் அம்புலி.
'வளவள'வென எந்நேரமும் பேசியபடி இருப்பான் அம்புலி. படிப்பு இல்லை என்றாலும், எதற்கும் அலட்டிக் கொள்ளாத நல்ல மனிதன்.
சென்னையும், அதன் வேகமும் புரிபடாத ஜெயராமிற்கு, எல்லாரிடமும் சகஜமாக பேச கூச்சம். அவனை விட அவன் மனைவி, மற்றவர்களிடம் பழகவே பயந்தாள். அந்நாட்களில், அவளுக்கு உதவியாய் இருந்தாள், அம்புலியின் மனைவி. நான்கு ஆண்டுகளில் அவர்களுக்குள் நல்ல நட்பு நிலவியது. அதன்பின், சென்னையில் வேறு இடத்திற்கு குடி போனதால், அம்புலியும், அவன் மனைவியும் இவர்கள் வாழ்க்கையை விட்டு விலகினர்.
''எம்புட்டு நாளாச்சு சார் உங்களப் பாத்து... ஆளே மாறிட்டீங்களே... செவ செவன்னு இருப்பீங்க... இப்போ கலரே மங்கிப் போச்சே,'' என்றவன், சிறிது இடை.ெவளி விட்டு அமர்ந்தான். இளம் வெயில், அவன் முகத்தை பதம் பார்த்தது.
''அப்படியா சொல்ற... வயசாகுதுல அதனால கலர் போயிருக்கும்.'' சமாதானப்படுத்தும் விதமாக சொன்னார் ஜெயராம்.
'கடகட' வென சிரித்தான் அம்புலி.
''அதுவும் சரிதான்; வீடு எங்க சார் இருக்கு... நம்ப வண்டியில வாங்களேன்; ரொம்ப நாளாச்சு. நானும் உங்க வீட்டை பாத்த மாதிரி இருக்கும்,'' என்று, நட்பு இழையோட அவன் கூறிய போது, மறுக்கத் தோன்றவில்லை. காரை ஓரமாக நிறுத்தி பூட்டிய பின், அம்புலியுடன், ரிக் ஷாவில் ஏறி அமர்ந்தார் ஜெயராம்.
''சார் கேட்க மறந்துட்டேன்... புள்ளைங்க பெரிசா வளர்ந்து இருக்குமில்ல... என்ன படிக்குதுங்க,'' என்று கேட்டான்.
''காலேஜ் போகுதுங்க...''
''இதப்பாருடா... அம்புட்டு பெரிசாயிடுச் சுங்களா...'' அம்புலியின் முகத்தில் சந்தோஷம் வழிந்தது.
அம்புலி கொஞ்சம் விசித்திரமான மனிதன். 'நாள் முழுவதும் ரிக் ஷா மிதித்து, உடம்பு வலிக்கு ராத்திரியில குடிக்கிறேன்...' என்று சமாதானப்படுத்தும் தவறுகளைக் கூட செய்யாதவன். தன் தொழிலுக்கு சம்பந்தமில்லாத அத்தனை விஷயங்களையும், விலாவாரியாக விவாதிப்பவன்.
''அப்புறம் வாழ்க்கை எப்படி போகுது?'' என்று பொதுவாய் கேட்டாலும், உள்ளுக்குள் அவனைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை ஜெயராமிற்கு.
''சூப்பரா போகுது சார்... எத்தனை வண்டி வந்தாலும், நம்ம வண்டியில போறவங்களும் வந்துட்டுத்தான் இருக்காங்க. என் வாழ்க்கையையும், எனக்கான மனுசங்களையும் ஆண்டவன் எங்கயும் ஒளிச்சு வைக்கல,'' என்றான்.
அவனுடைய திருப்தியான பதில், ஏனோ ஜெயராமிற்கு அடி மனதில் பொறாமையை ஏற்படுத்தியது.
''நீ தான் நல்லா இருக்கேன்னு சொல்றே. ஆனா, உன்னை பாத்தா அப்படி தெரியலயே... இந்த 20 ஆண்டுகள்ல உன்கிட்ட பெரிய மாற்றம் வரலயே... அட்லிஸ்ட் ஒரு ஆட்டோ வாங்கி ஓட்டியிருந்தாலாவது ஏதோ முன்னேறி இருக்கேன்னு ஆறுதல் பட்டுக்கலாம்,'' என்று அவனுடைய தன்னம்பிக்கையை அசைத்து பார்க்கும் வெடிகுண்டை, வீசினார் ஜெயராம்.
''நம்ப ஊர்ல தான் சார் எல்லாரும் இப்படி நினைக்கிறாங்க... நல்லா இருக்கேன்னு சொல்றதுக்கு கூட அவங்களுக்கு பெரிய அடையாளம் தேவைப்படுது. ஆனா, நான் மன நிறைவோட, ஆரோக்கியத்தோட, நல்ல புள்ளைங்களோட எந்தக் குறையும் இல்லாமத் தான் இருக்கேன்,'' என்றான் அம்புலி.
அவனுடைய அழுத்தமான பதில், ஜெயராமின் மனதிற்குள் ஈகோவை தூண்டி, 'எத்தனை அகங்காரமாய் பேசுகிறான்...' என்ற கோபத்தை ஏற்படுத்தியது. 'கோடி கோடியாய் சம்பாதிச்ச போதும், இன்னும் தேடி ஓடத் தோன்றும் தன்னுடைய எதிர்நீச்சல், மனம் மீது இத்தனை காலம் பொத்தி வைத்திருந்த கர்வத்தை, இந்த ரிக் ஷாக்காரன் தகர்த்து விடுவானோ...' என்ற கிலியும், மனதுக்குள் ஏற்பட்டது.
''அப்படியென்ன பெரிசா சம்பாதிச்சுட்ட... இத்தனை சந்தோஷமா வாழ...'' என்று நக்கலாய் கேட்டார் ஜெயராம்.
ஆள் அரவமற்ற சாலையில், வண்டியை எந்த தடங்கலும் இன்றி வேகமாக செலுத்தியபடி, ''சம்பாதிக்கல... ஆனா, இயற்கையாவே ஆண்டவன் தந்திருக்கான்,'' என்றான் மென்மையாக!
''என்னது அது?''
''போதும்ங்கிற மனசு.''
வேகத் தடையில் ஏறி, இறங்கிய வண்டி, சட்டென்று நொடியில் பிசகி, 'ஜெர்க்' அடித்தது. ஜெயராமின் மனசும் தான்! ஆனால், அவருள் இருந்த ஆணவம் என்ற அரக்கன், அம்புலியின் தன்னம்பிக்கை வேரை பிடுங்கி எறிந்திட துடித்தது.
''இதெல்லாம் சுத்த ஹம்பக்... வாய்ப்பு கிடைக்கலன்னு சொல்லு. ஆண்டவன் எல்லாரையும் ஒரே மாதிரி தான் படைக்கிறான். அப்படி இருக்கயில எனக்கிருக்கிற ஆசை, உனக்கில்லாம போகுமா என்ன... உனக்கு வாய்ப்பு கிடைக்கல. 20 ஆண்டுகளுக்கு முன் நீ பார்த்த ஜெயராமுடைய வாழ்க்கையையும், இன்னக்கி உள்ளதையும் உன்னால் கற்பனை செய்து கூட பாக்க முடியாது.
''ஆடம்பர பங்களா, வீட்டுக்கு முன் ரெண்டு கார், திராட்சை தோட்டம்... இப்பெல்லாம் கோடிக்கு குறைவா லாபம் தர்ற பிசினசை செய்றதேயில்லை.
''இதெல்லாம் நான் பெருமைக்கு சொல்லல. எப்பவும் நம் ஆசை கட்டுக்கடங்காம இருக்கணும்; அப்பத்தான் வெற்றியடைய முடியும். இப்பக்கூட ஒரு பெரிய டீலிங்கை யோசிச்சுட்டு தான் இருக்கேன். எனக்கு இந்த ஓட்டமும், வேகமும் ரொம்ப பிடிச்சிருக்கு. இப்படியே ஓடிட்டு இருக்கணும்ன்னு தான், ஆண்டவன் கிட்ட கேட்கிறேன்.''
அவர் பேச்சில் கம்பீரமும், பெருமையும் இருந்தது.
அம்புலி மெதுவாய் பின்புறம் திரும்பி பார்த்து சிரித்தான்.
''ரொம்ப சந்தோஷம் சார்... பெரிய பங்களான்னா ஒரு ஏழெட்டு அறை இருக்கும்ல,'' என்று கேட்டான்.
''ம்...'' என்றார் பெருமை மேவ!
''அத்தனை அறைகள் இருந்தாலும், நீங்க ஒரு அறையில தானே தூங்குவீங்க... நான் காலையில ஏழு இட்லி சாப்பிடுவேன்; ரொம்ப பசிச்சா, கூட ஒண்ணு சாப்பிடுவேன். நீங்க எப்படி?''
சம்பந்தமில்லாமல் கேட்கிற அவனை, லேசான எரிச்சலுடன், ''நாலு இட்லி சாப்பிடுவேன்...'' என்றார்.
''அதெப்படிங்க ஒரு நாளைக்கு, 500, 600 சம்பாதிக்கிற நானே எட்டு இட்லி சாப்பிடயில, கோடி ரூபாய் சம்பாதிக்கிற நீங்க, 200 இட்லியாவது சாப்பிடணுமில்ல,'' என்றான்.
அவன் வார்த்தையில் இருந்த நையாண்டி, சுர்ரென்று உரைக்க, கோபம் எட்டிப் பார்த்தது.
''என்ன அம்புலி... நக்கல் செய்றீயா?'' என்றார் கோபமாக.
''சத்தியமா இல்ல சார்... எனக்கு தெரிஞ்சத சொன்னேன். வாழ்க்கையில நிறைய சம்பாதிக்கக் கூடாது, கஷ்டப்பட்டுட்டே இருக்கணும்ன்னு சொல்ல வரல. ஆனா, பணம் சம்பாதிக்க மட்டுமே வாழ்நாட்களை கழிக்கிறதுல எனக்கு அவ்வளவா இஷ்டமில்ல,'' என்றான்.
அவன் வார்த்தையில் இருந்த மேதாவித்தனம், ஜெயராமிற்கு மெல்லிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அவருடைய கார்ப்பரேட் வாழ்க்கையில் கூட, இதுபோன்ற வார்த்தைகள் பரிச்சயமில்லை.
''இருபது ஆண்டுகளுக்கு முன் நீங்க பாத்ததை விடவும், நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். பிள்ளைகளை படிக்க வச்சிருக்கேன்; உறவுகளுக்கு முடிஞ்சத செஞ்சுருக்கேன்; சில விஷயங்கள் தானா அமைஞ்சது; சிலது அமையாம போனது. அதுக்காக நான் வருத்தப்படல!
''இந்த எண்ணம் தான் என் பலம். எல்லாம் தன்னால நடக்கும் சார்... எதுக்கு பின்னாடியாவது நாம ஓட ஆரம்பிச்சா, இந்த வாழ்க்கைய அனுபவிச்சு வாழ நேரமிருக்காது,'' என்றான் அம்புலி.
ஆச்சரியத்தில் உறைந்து போனார் ஜெயராமன். 'அழுக்கு லுங்கி, கிழிந்த சட்டை, எட்டுக்கு பத்தில் படுக்கையறை, நித்தமும் பொதிமாடு கணக்காய் பாரமிழுக்கும் பொழப்பு. இதில், எதை அனுபவிக்கிறான் இவன்...' என்ற ஏளனம் மிகுந்து, கொஞ்சம் சத்தமாகவே சிரித்தார்.
''என்ன சார் சிரிக்கிறீங்க... இந்த பஞ்ச பய என்னத்த அனுபவிச்சுட்டான்னு நினைச்சு சிரிக்கிறீங்களா... இந்த அம்புலி ஆசை இல்லாதவன், ஆசைக்காக அடுத்தவங்களை சாய்க்க நினைக்காதவன். உண்ண ஒரு பிடி சோறு, உடுக்க ஒரு முழம் உடைன்னு பெரியவங்க சொன்னதை புரிஞ்சவன். படிக்காட்டியும், எந்த அழிச்சாட்டியமும் இல்லாம வாழத் தெரியும். நினைச்சா தூங்கவும், முழிச்சுக்கவும், தன்னைத் தானே கட்டுப்பாட்டுல வச்சுக்கற பெரிய எத்தன்னு எனக்கு நானே பெருமை பட்டுக்குவேன்.
''இப்பக்கூட நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்களே... ஏதோ பல கோடி ரூபாய் பிசினசை முடிக்கணும்ன்னு, அமைதி இல்லாம தவிக்கிறேன்னு! இதோ, என் பாக்கெட்ல பத்து பைசா இல்ல; ஆனா, நான் எந்தக் கவலையும் படல. கூட்டை விட்டு புறப்படற பறவை, பசியோடு திரும்பற அத்தியாயத்தை ஆண்டவன் எழுதறதில்ல. என் வாழ்க்கையும் அந்த நம்பிக்கை தான் சார்,'' என்று, ஆத்மார்த்தமாய் சொன்னான் அம்புலி.
அதற்குள், வீடு வர, ரிக் ஷாவில் இருந்து இறங்கிய ஜெயராம், ''வீட்டுக்கு வாயேன் அம்புலி,'' என்று பாக்கெட்டில் இருந்த, 100 ரூபாயை எடுத்து நீட்டினார்.
''வேணாம் சார்... உங்க கூடப் பேசி ரொம்ப நாளாச்சேன்னு தான், உங்கள என் வண்டியில ஏறச் சொன்னேன். அதுக்கு போய் காசு வாங்குறதா... நான் இன்னொரு நாள் வீட்டுக்கு வரேன்,'' என்று உளப்பூர்வமாய் சொன்னான்.
அவனுடைய பேச்சும், செயலும், வார்த்தைகளும், அதில் தெறிந்த பதட்டமில்லாத அமைதியும், ஜெயராமிற்கு அவனிடத்தில் ஏற்பட்ட தகிப்பை, மேலும் அதிகரித்தது.
உள்ளே போக எத்தனித்த ஜெயராம், ஏதோ தோன்ற நின்று திரும்பி, ''அப்போ, நிஜமாவே உனக்கு என்னை பார்த்தா, எந்த ஆச்சரியமும் அதாவது பொறாமையும் தோணலயா...'' என்று, தன் மனதில் இருந்ததை கேட்டு விட்டார்.
வாய் விட்டு சிரித்த அம்புலி, ''எதுக்கு சார் உங்களப் பாத்து பொறாமைப் படணும்... உங்களப் பாத்தா பரிதாபம் தான் வருது. எப்பவும் சிரிச்ச முகமா இருந்த நீங்க, இப்போ இறுக்கமா இருக்கிறத பாக்க பாவமா இருக்கு. இந்த ரிக் ஷாக்காரன் இந்த வார்த்தையை சொல்லலாமான்னு தெரியல. ஆனாலும் சொல்றேன்... தேவைகள் தீர்ந்து போனதா சரித்திரம் இல்ல; தேவைகளை நாம தான் தீர்த்துக்கணும். கோடி ரூபாய்க்கு அதிபதியா வாழ்றவன், பணக்காரன் இல்ல; தன்னோட ஆசைங்கிற யானைக்கு, அங்குசத்தை மாட்டிட்டு நிம்மதியா வாழ்றவன் தான் பணக்காரன்,'' என்றபடி ரிக் ஷாவை மிதித்தான் அம்புலி.
அவன் போவதைப் பார்த்த ஜெயராமிற்கு, வாழ்க்கையை வாழக் கற்றுத் தந்த ஆசான் ஒருவன், ரிக் ஷாவில் போவது போல் தோன்றியது.

Post Reply