Short story by Amaruvi Devanathan

Post Reply
harimau
Posts: 1819
Joined: 06 Feb 2007, 21:43

Short story by Amaruvi Devanathan

Post by harimau »

இடம்
by Amaruvi Devanathan

‘வேற எதாவுது வேல்யூபிள் பொருள் காணாமப்போயிருந்தா சொல்லுங்க சார்’

காவல் ஆய்வாளரின் பேச்சு எனக்கு எரிச்சலை அளித்தது. எது வேல்யூபிள் ? எது மதிப்பில்லாதது ? அதை யார் தீர்மானிப்பது ?

‘நகை, ஐபேட், ஐபோன், வீட்டு டாக்குமெண்ட், இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி இப்படி ஏதாவது இருந்தா எஃப்.ஐ.ஆர். போடலாம். நீங்க சொல்றதுல ஒண்ணுமே இல்லையே. புஸ்தகம் எல்லாம் எஃப்.ஐ.ஆருக்கு ஒர்த் இல்ல ஸார்,’ என்றவரிடம் என்ன சொல்வது ?

புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஓமலூர் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறினால் மட்டுமே ஹாஸ்டல் கேட் எனப்படும் சேலம் அரசு பொறியியல் கல்லூரியின் விடுதி நிறுத்தத்தில் இறங்க முடியும். சில வேளைகளில் அங்கு சில பஸ்கள் நிற்பது கிடையாது.

ஹாஸ்டல் கேட்டில் இறங்கி 5-வது விடுதிக்குச் செல்ல மனத்துணிவு வேண்டும். காடு போன்று அடர்ந்த பாதையில் இரவில் நடக்கையில் ஒரு பாம்பாவது தென்படும். ஆனால் அவை ஏனோ ஹாஸ்டலுக்குள் வருவதில்லை. மெதுவாக ஓசைப்படுத்திக்கொண்டே நடந்து ஒரு வழியாக மெஸ் ஹால் எனப்படும் உணவுக்கட்டடத்தை அடைந்துவிட்டால் பிறகு 5-வது விடுதிக்கு 5 நிமிடமே நடக்க வேண்டியிருக்கும். செல்வம் அன்று ஒரு வழியாக விடுதிக்கு வந்து கதவைத் தட்டினான்.

‘காலைல மூணு மணிக்கி என்ன இழவுக்குடா வந்தே?’ என்றேன் கடுப்புடன். அவன் அறைச் சாவி என்னிடம் இருந்த்தாக்க் கண நேரத்தில் பொறி தட்டியவுடன் ‘இழவு’ என்று சொன்னதற்காக சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டேன்.

‘மச்சி, பஸ்ஸு கிடைக்கலடா. பசிக்குதுடா. ஏதாவது இருக்கா?’

‘போடா சொங்கி. நாலு நாளா மெஸ்ஸு ஸ்டிரைக். நாங்களே வயித்துல ஈரத்துணி தான்,’ என்றவனை ‘மாப்ள, அப்பிடி சொல்லாத. காலைலேருந்து ஒண்ணும் சாப்பிடல. வா டாபா போகலாம்,’ என்றான்.

‘காலை மூணு மணிக்கு டாபாவா ? எதுனா இருந்துதான் பேசுறியா?’ என்றேன். டாபா எனப்படும் நெடுஞ்சாலை உணவகங்கள் சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்த பஞ்சாபி உணவகங்கள். சுக்கா ரொட்டி, நான் முதலான பஞ்சாபி உணவுகளை எனக்கு அறிமுகப் படுத்தியவை அவை. ஆனால் அந்த இரவு நேரத்தில் செல்வது அபாயகரமானது. நான்கைந்து பேராக வேண்டுமானால் போகலாம்; குறுக்கு வழி உண்டு. ஆனால் அது காட்டு வழி. நரி, காட்டு நாய், பாம்பு முதலியன தென்படும்.

செல்வத்துக்கு அசாத்தியப் பசி. ஒரு வழியாக இருவரும் டாபாவை நோக்கி நடந்தோம். இருள் பழக சிறிது நேரமானது. காட்டின் ஒலிகள் அதிகரித்தன. தூரத்தில் நாயின் ஊளை கேட்டது.

‘வேணாம்டா, போயிரலாம்டா,’ என்ற என்னைக் கையைப் பிடித்து இழுத்தவாறு சென்றான் செல்வன்.

தூரத்து தேசிய நெடுஞ்சாலையில் வாகன்ங்களின் பயண விளக்குகள் காற்றில் பறந்தன. வாகன்ங்களின் அமைப்புகள் தெரியவில்லை. சுமார் ஐநூறு மீட்டர் இருந்திருக்கலாம். மெதுவாக நெடுஞ்சாலையைத் தொட்டுவிட்டால் அங்கிருந்து நடந்து செல்வது எளிது.

செல்வம் கீழே குனிந்து தன் காலைத் தடவினான். ‘முள்ளு குத்திடுச்சு மச்சி,’ என்றவன் முகத்தில் வியர்வை தெரிந்தது. மெதுவாக நடக்கத் தொடங்கியவன் நடையில் ஒரு தள்ளாட்டம் தெரிந்தது.

‘ரொம்ப பசிக்குதாடா?’ என்றேன். அவன் ஒன்றும் சொல்லாமல் என்னைப் பார்த்தான். கண்கள் இருளில் கூட வெளிறித் தெரிந்தன. வாயில் எச்சில் ஒழுகுவது வாகனத்தின் தீற்றல் ஒளியில் தெரிந்தது.

‘என்னாச்சு மாமூ?’ என்று அருகில் செல்ல முயன்ற போது தடாலெனக் கீழே விழுந்தான் செல்வம். கை, கால் கோணியபடி வாயில் நுரை தெரிந்தது.

விஷயம் புரிந்துவிட்டது போல் இருந்தது. குத்தியது முள் இல்லை.

ஒரு வேளை பாம்போ ? இருக்கலாம். இருளில் தெரியவில்லை. எச்சரிக்கையாக என்று தரையில் காலால் ஓங்கி அறைந்தேன்.

செல்வம் பேசவில்லை. மரக்கட்டை போல் கிடந்த அவனைத் தூக்க முயன்று தோற்றேன். எதற்கும் இருக்கட்டும் என்று அவனது இடது முட்டிக்கு மேல் என் கைக்குட்டையால் இறுகக் கட்டினேன்.

வேறு வழி இல்லை என்பதால் துணிந்து அவனது கைகளைத் தூக்கி, என் தோள் மீது சார்த்தி உப்பு மூட்டை தூக்குவது போல், பாதி தூக்கியும் மீதி இழுத்துக்கொண்டும் கல், முள் என்று எல்லாவற்றிலும் சென்றேன். ஓடினேன் என்பது சரியாக இருக்கும்.

ஒரு வழியாக நெடுஞ்சாலையை அடைந்து ஏதாவது வாகனம் நிற்குமா என்று கை காட்டிப் பார்த்தேன். கும்மிருட்டில் நான் பேய் போல் சாலையில் நிற்க, என் முதுகில் இன்னொரு பேய் போல் செல்வம். அதனாலோ என்னவோ ஒரு வாகனம் கூட நிற்கவில்லை. நேரம் கடந்துகொண்டிருந்தது. செல்வத்திற்கு முற்றிலுமாக சுய நினைவு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நான் அவனை இழந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது.

அப்போது வேகமாக எங்களைக் கடந்து சென்ற வெள்ளை அம்பாசிடர் கார் சட்டென்று கிறீச்சிட்டு நின்று, பின் நோக்கி நகர்ந்து வந்து எங்கள் முன் நின்றது. உள் விளக்கு எரிந்தவுடன் பின் இருக்கையில் இருந்த வெள்ளை மீசை வைத்த பெரியவர், ‘என்ன தம்பி, வண்டீல வர்றீங்களா?’ என்றார். ‘தெய்வம் மனுஷ்ய ரூபேண’ என்று அப்பா சொல்வது நினைவுக்கு வந்தது.

காரில் மெதுவாக செல்வத்தை ஏற்றி இருபது மணித்துளிகளில் கோகுலம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தோம். பாம்புக் கடி தான். செல்வத்தின் பாதத்தில் பாம்பின் பதிவைக் கண்டு பெரியவர்,’ நல்ல பாம்பு தம்பி. கொஞ்சம் கஷ்டம் தான்,’ என்றார். நாங்கள் சேலத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதை அறிந்து, பின்னர் மருத்துவமனை ஊழியரிடம் ஏதோ பேசினார். சில மணித்துளிகளில் சிறப்பு மருத்துவர்கள் விரைந்து வந்தனர்.

என்னென்னவோ செய்து இரண்டு நாட்களில் செல்வம் உயிர் பிழைத்தான். ஆனால் பேச்சு வரவில்லை. ஒரு வாரம் முழுவதும் மருத்துவமனையில் இருந்தோம். பெரியவர் மாலை வேளைகளில் வந்து தினமும் பார்த்துச் சென்றார். எங்கள் உதவிக்கு என்று ஒரு மனிதரையும் அனுப்பியிருந்தார்.

செல்வத்தையும் என்னையும் ஏழு நாட்கள் கழித்து பெரியவரே கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். போகும் வழியில்,’ சந்தியாவந்தனம் எல்லாம் செஞ்சீங்களா தம்பி?’ என்றார். தூக்கி வாரிப் போட்டது. ‘பார்த்த உடனேயே பாப்பாரவங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். அதான் கேட்டேன். விட்டுடாதீங்க,’ என்றவர், ‘ஆமா என்ன ஊரு சொன்னீங்க? கம்பர் பொறந்த ஊருன்னீங்களே, வயசாயிடுச்சில்ல நினைவு நிக்க மாட்டேங்குது, ஏனுங்?’ என்று கேள்வியா பதிலா என்று தெரியாதபடி நயமான கொங்குத் தமிழில் கேட்டார்.

‘உங்க பேரு தம்பி ஆமருவின்னு என்ன ஒரு அழகு பாருங்க. அந்த திருமங்கை கள்ளப்பயங்க தம்பி. கள்ளன்னா ஜாதி இல்லீங்க. சரியான திருடனுங்க அவன். என்னமா எழுதிட்டுப் போயிட்டான் !’ என்று திருமங்கையாழ்வாரைத் தொட்டார். நான் மிகவும் குழம்பியிருந்தேன். பார்வையில் பிராமணராகத் தெரியவில்லை; கவுண்டராக இருக்கலாம். பேச்சு அப்படித்தான் இருக்கிறது. ஆனால் ஆழ்வார் பற்றியெல்லாம் பேசுகிறாரே !’ என்று எண்ணினேன். குழப்பம் தீரவில்லை.

கல்லூரியில் விடுதியில் கொண்டு விட்டு,’ ஒரு தரம் நம்ம ஊட்டுக்கு வந்து போடணு ஆமா’. கட்டளை போல இருந்தாலும் அன்பு தெரிந்தது. கருப்பூர்ல வந்து ‘பண்ணை’ன்னா ஒட்டுக்க கூட்டிட்டு வந்துடுவானுங்க ஏனுங்.’ என்று சொல்லிச் சென்றார்.

மறுநாள் கல்லூரியில் முதல்வர் அழைத்தார். ‘நீங்கள் காவேரி கவுண்டருக்குச் சொந்தமா?’ என்று வினவினார். பெரியவர் முதல்வரிடம் தொடர்பு கொண்டு பேசியிருப்பார் போல என்று நினைத்தேன். அன்று மாலை எங்கள் விடுதிக்குச் செல்லும் வழியில் முட்செடிகள் அகற்றப்பட்டிருந்தன. அரசுக் கல்லூரியில் அவ்வளவு விரைவாக்க்கூட வேலைகள் நடைபெற முடியும் என்று அறிந்தபோது வியப்பாக இருந்தது.

செல்வம் தேறிவிட்டான். ஒரு மாதம் கழிந்திருக்கும். நாட்டு நலப் பணித்திட்டக் குழுவில் ( என்.எஸ்.எஸ்.) கருப்பூர் சென்றோம். கல்லூரி மாணவர்கள் அனைவரையும் பண்ணை கூப்பிடுகிறார் என்று அறிந்து அவர் வீட்டிற்குச் சென்றோம். ஆரவாரமாக விளையாடியபடியே அவரது தோட்டத்தை அடைந்து உள்ளே இருந்த அவரது வீட்டிற்குச் சென்றோம். வாசலில் நிறைய காலணிகள் கிடந்தன. ஆனால் ஆள் அரவமே இல்லை. மெதுவாக உள்ளே அழைத்துச் சென்றனர். பெரிய முற்றத்தின் நடுவில் ஒரு நாற்காலியில் பெரியவர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க சுமார் இருபது ஊர்க்கார்ர்கள் சிரத்தையாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

எங்களைப் பார்த்தவுடன் ,’ அட நம்ம தம்பிங்களா, வாங்க இப்பிடி..’ என்று வாஞ்சையுடன் அழைத்து,’ செல்வம் எப்பிடி இருக்காப்புல? அடிக்கடி வந்து போடச் சொன்னேன் இல்ல?’ என்றார். அசடு வழிய நின்றுகொண்டிருந்த என் முகத்தை உற்றுப் பார்த்தார்.

‘அட ஆமா, நீங்க வைஷ்ணவங்க இல்ல ? ஐயங்காருதானே ? பாசுரம் பாடுவீங்க தானெ?’ என்று சரமாரியாகக் கேட்டார். என் நெற்றியில் இருந்த ஸ்ரீசூர்ணம் என்னும் வைணவ அடையாளம் அவருக்கு என்னை முழுமையாக நினைவூட்டியிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

‘பாடுவேங்க ஐயா,’ என்றேன்.

‘ஆமா, அது என்ன ஊரு சொன்னீங் ? மறந்து போவுது இப்பெல்லாம்,’ என்றவருக்கு, ‘தேரழுந்தூர் ஐயா’ என்றேன். ‘ஆமா ஆமா, அந்த கம்பன் பொறந்த ஊரு தானே. நெனப்பு வந்துட்டு,’ என்று நெற்றியில் தொட்டுக் கொண்டார்.

‘இப்ப பாடுவீங்ளா?’

தட்ட முடியாமல் ,’ செங்கமலத் திருமகளும்..’ என்னும் திருமங்கையாழ்வார்ப் பாசுரம் பாடினேன். கண் விழித்துப் பார்த்தேன். அத்துனை பேரும் எழுந்து நின்றுகொண்டிருந்தார்கள். பெரியவர் என் அருகில் கை கூப்பி, கண்களில் நீர் பெருக நின்றுகொண்டிருந்தார்.

‘என்ன பாசுரம் தம்பி இது. கள்ளப்பய கொல்றானே,’ என்று நா தழுதழுத்தார். நான் குழம்பிப்போனேன். ஒரு வேளாளர், ஊரின் நாட்டாண்மை போல் தெரிகிறது அவருக்குப் பாசுரங்களில் இவ்வளவு ஈடுபாடா? பார்த்தால் படித்தவர் போலக் கூட தெரியவில்லை.

‘தம்பி ஆமருவி, நீங்க எப்ப வேணும்னாலும் நம்மூட்டுக்கு வரலாம். முடிஞ்சா சனிதோறும் வாங்க. வந்து ஒரு நாலு பாசுரம் பாடுங்க. ஆன்ந்தமாக் கேப்போம். பருப்பும் நெய்யும் பிசஞ்சு ரசம் சோறு செய்யச் சொல்றேன். அம்மிணி செங்கமலம், தம்பிக்கு வேணுங்கறத ‘தளிகை’ பண்ணிப் போடும்மா,’ என்றார். அவரது பெண் போலும் அந்த செங்கமலம்.

ஒரு நிமிடம் உறைந்து போனேன். செங்கமலம் ஒரு பரம வைணவப் பெயர். அத்துடன் பெரியவர் ‘தளிகை’ என்று சொன்னது போல் பட்டது. ‘என்ன நடக்கிறது இங்கே ?’ என்று குழம்பியபடி நின்றிருந்தேன். தளிகை என்பது பிராமண வைஷ்ணவர்கள் ‘உணவு தயாரித்தல்’ என்னும் பொருளில் பயன் படுத்தும் ஒரு நல்ல தமிழ்ச் சொல்.

அத்தனைபேரும் என்னையே பார்த்தனர். எனக்கு அவ்வளவு பேர் என்னைப் பார்த்துப் பழக்கமில்லை. கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.

பெரியவர் பேசினார். ‘என்ன, தம்பி கொழம்பிட்டீங்களோ ? ஏனுங் ? கவுண்டன் ஊட்டுல கறி தானே செய்வானுங்க, கெளவன் தளிகைங்கறான், செங்கமலம்னு பொண்ணு பேர் இருக்குது, அதானே, என்னங் நான் சொல்றது?’ என்று புன்சிரிப்புடன் கேட்டார். நான் வழக்கம் போல் குழப்பத்துடன் நின்றிருந்தேன்.

‘அங்கன பாருங்க தம்பி. அந்த அறைக்குப் பேர் ‘தளிகை அறை’. இதோ இந்த அறைக்குப் பேர் ‘முதலியாண்டான் உள்’. என்னோட ரூமுக்கு ‘கிருபா சமுத்திரம் உள்’னு பேர். இப்பிடி எல்லாமே விஷ்ணு தொடர்பாத்தான் இருக்கும்,’ என்றார். தலை சுற்றி விழுந்துவிடுவேன் போல் இருந்தது.

‘உள்ள வாங்க, இன்னும் பலது இருக்கு,’ என்று உள்ளே அழைத்துச் சென்றார். ‘பூஜை அறை’ போல் இருந்த ஒரு இருட்டறையில் ஒரு பெரிய மரக் கோபுரம் இருந்தது. கோவிலாழ்வார் என்று எங்கள் வீட்டில் சொல்வார்கள். கை கால்களை அலம்பிக்கொண்டு கோவிலாழ்வாரைத் திறந்தார். உள்ளே ஏராளமான சாளக்கிராமங்களும், சின்னச் சின்ன விக்கிரகங்களும் இருந்தன. ஆச்சரியத்தால் வாய் பிளந்து நின்றிருந்த என்னிடம் சுவற்றில் இருந்த ஒரு மிகப் பழைய ஓவியத்தைக் காண்பித்தார். இராமானுசர் போல் இருந்த ஒரு பெரியவரிடம் ஒரு 50 வயதான பெண்மணி ஆசி பெறுவது போல் வரையப்பட்டிருந்த்து.

‘இது இராமானுசருங்க. அம்மிணி யாரு தெரியுங்களா ? எங்க சேலத்துக் கார அம்மிணிங்க. கொங்கப்பிராட்டின்னு பேருங்க. சேலத்துலேர்ந்து ஸ்ரீரங்கம் போய், இராமானுசர் கிட்ட பஞ்ச சம்ஸ்காரம் வாங்கிக்கிட்டவங்க. பொறவு சேலம் வந்து இராமானுச சித்தாந்தத்தப் பரப்பினாங்க. அவங்களால வைஷணவனான குடும்பம் எங்க மூதாதை குடும்பம். அதால நாங்கள்ளாமும் வைஷ்ணவங்க தாங்க தம்பி,’ என்று சொல்லி, படத்தை விழுந்து சேவித்தார். ஒன்றும் செய்வதறியாமல் நானும் சேவித்தேன்.

என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள வெகு நேரம் ஆனது. வேளாளர் குலத்தின் ஒரு பெண்ணுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த உடையவர் இராமானுசரின் செய்கையை நினைப்பதா ? கொங்குப் பிராட்டி என்னும் அந்த மாது சிரோன்மணியை நினைப்பதா ? அனைவரையும் உள்ளிழுத்து, அனைவருக்கும் இறையருள் தரும் அந்த சித்தாந்தத்தை நினைப்பதா ? என்று தெரியாமல் ஒரு மாதிரி விக்கித்து நின்றிருந்தேன்.

அதன் பிறகு அவர் சொன்னது என் அறியாமையின் உச்சத்தை எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. ‘பெரியாழ்வார் இருந்தாரில்லீங்களா தம்பி, அவுரு கூட இங்க சேலம் பக்கத்துல இருக்கற கொங்கனூரப் பாடியிருக்காருங். “கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்

எங்கும் புகுந்து விளையாடும் என்மகள்.’ பாசுரத்தின் ஒற்றை வரியைப் பாடியபோது அவரது முகத்தில் பேரமைதி ஏற்படுவதைக் கண்டேன்.

‘இராமானுசர் கொங்கனூர் வந்து இவங்களுக்கு தீட்சை கொடுத்தாருன்னும் சொல்றாங்க; இவுங்க அங்க போயி வாங்கிக்கிட்டாங்கன்னும் சொல்றாங்க. பழைய சுவடியெல்லாம் கரையான் அரிச்சுப் போயிடுச்சு. ஆனா எங்க ஊருக்கு ராமானுச சம்பந்தம் இருக்குன்னு மட்டும் தெரியுங்..’ சொல்லும்போதே அவர் பெருமகிழ்ச்சியுடன் இருந்தது தெரிந்தது.

அன்று இரவு முழுவதும் பெரியவர் வீட்டில் நிகழ்ந்த நிகழ்வுகளின் பேரதிர்ச்சி நீடித்தது. பிராமணர் அல்லாதவர் கூட வைஷ்ணவரா ? ஒரு பெண் எப்படி இராமானுசரிடம் தனியாக தீட்சை பெற்றாள் ? எப்படிப்பட்ட முற்போக்கான, முன்னேறிய சமூகமாக நாம் இருந்திருக்கிறோம் என்ற எண்ணமும் மேலோங்கியே இருந்தது.

அதன் பிறகு இரு முறை அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். ஒரு புரட்டாசி மாதம் விசேஷமான பிரபந்த கோஷ்டி எல்லாம் நடைபெற்றது. ஒரு சமயம் ஸ்ரீரங்கத்தில் இருப்பது போன்ற உணர்வு.

அந்த ஆண்டு பொறியியல் கடைசி வருடம் என்பதால் கருப்பூர் செல்லவில்லை. தேர்வுகள் முடிந்து விடுதியைக் காலி செய்த பிறகு, பெரியவரிடம் சொல்லி வரலாம் என்று கருப்பூர் சென்றேன்.

நீண்ட கூடம் உடைய அவரது இல்லத்தில், பெரிய கண்ணாடி பிரேம் போட்ட படத்தில் இருந்து வாஞ்சையுடன் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார் பெரியவர்.

அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் செங்கமலம் அம்மாள் வந்து, ‘ தம்பி, நீங்க எப்பவாவுது வருவீங்க. அப்ப உங்க கிட்ட அப்பா இத கொடுக்கச் சொன்னாங்க,’ என்றவாறு கையளவே உள்ள சிறிய பெட்டியை என்னிடம் கொடுத்தார்.

1910ம் ஆண்டு அச்சிடப்பட்ட நாலாயிர திவ்யப்பரபந்த நூல் ஒன்று பட்டுத் துணியில் சுற்றப்பட்டு இருந்தது. கண்களில் நீர் வழிய மெதுவாக நூலைப் பிரித்தேன். மடித்து வைக்கப்பட்ட ஒரு பழுப்புக் காகிதம் தென்பட்டது.

பிரித்தேன். பெரியவர் ஒரு வரியில் எழுதியிருந்தார் :

‘பொக்கிஷம் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டது. ஆசீர்வாதம் தம்பி’

‘ஆமாம் ஸார், எஃப்.ஐ.ஆர். போட வேண்டாம். சரியான எடத்துக்குதான் அது போயிருக்கும்,’ என்ற என்னை ஆய்வாளர் வினோதமாகப் பார்த்தார்.

Amaruvi Devanathan | November 10, 2015 at 11:25 am | Tags: இராமானுசர், சிறுகதை, சேலம் அரசு பொறியியல் கல்லூரி |

Sundara Rajan
Posts: 1081
Joined: 08 Apr 2007, 08:19

Re: Short story by Amaruvi Devanathan

Post by Sundara Rajan »

இராமானுஜருக்கு முன்பும் தமிழகத்தில் வைணவம் தழைத்திருந்தது . உடையவர் அதில் முன்னேற்றங்கள் செய்து
பரப்பினார்.

Post Reply