Tamils in Malacca

Post Reply
harimau
Posts: 1819
Joined: 06 Feb 2007, 21:43

Tamils in Malacca

Post by harimau »

தமிழர் பண்பாடு -- மலாக்கா செட்டிகள் -- மொழிச் சிதைவின் அடையாளம்



இன்று வரலாற்று நகரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மலாக்கா 14ஆம் நூற்றாண்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாகத் திகழ்ந்துள்ளது. ஐரோப்பிய - ஆசிய நாட்டு வாணிபர்கள் தங்களின் கப்பல் பயணத்தில் மலாக்கா துறைமுகத்தைக் கடந்தே போக வேண்டிய ஒரு காலகட்டத்தில் தமிழர்களும் இங்கே வாணிகம் செய்ய வந்துள்ளார்கள்.
கலிங்கப்பட்டணத்திலிருந்தும் ஏனைய தமிழகத் துறைமுகங்களிலிருந்தும் பாய்மரக்கப்பல்களில் வாணிபம் செய்ய வந்த இவர்கள் ‘மலாக்கா செட்டி’ (Malacca Chetti) என்றே அழைக்கப்பட்டார்கள். ‘செட்டி’ என்ற இந்த வார்த்தை வியாபாரிகள் என்னும் பொருள் கொண்டு மலாய் மொழியில் வழங்கப்பட்டது. நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்கும் இந்த மலாக்கா செட்டிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
14ஆம் நூற்றாண்டில் சுமத்திராத் தீவின் ஒரு நகரமான பலம்பாங்(Palembang)கிலிருந்து வந்த இந்து இளவரசனான பரமேஸ்வரா (Parameswara) முதலில் தமாஸ்சேக் (Tamasek) என்று அப்போது பெயர்பெற்றிருந்த சிங்கப்பூருக்கு வந்து பின் மலாக்கா மாநிலத்தைக் கைப்பற்றினான். இக்காலகட்டத்தில் தமிழர்கள் இந்தச் சுல்தானின் அரண்மனையில் பிரதம அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத் தளபதிகளாக இருந்துள்ளார்கள்.
சுல்தான் பரமேஸ்வராவின் ஆட்சியின்போதுதான் இந்த மாநிலத்துக்கு மலாக்கா என்னும் பெயரை அவன் அதிகாரபூர்வமாகப் பிரகடனப்படுத்தினான். மலாய் மீன்பிடிக் கிராமமாக இருந்த இந்தக் கடற்கரையை வாணிபத் துறைமுகமாக்கியது அப்போது அங்கிருந்த தமிழர்கள்தாம். அவர்கள் மலாக்கா மாநிலத்தில் இருந்தவர்களைவிடக் கல்வியிலும் வியாபாரத்திலும் சிறப்புற்றிருந்தார்கள். எனவேதான் அவர்களைப் பரமேஸ்வரா தனது அரண்மனையில் முக்கியப் பதவிகளில் அமர்த்தினான்.
1414இல் இந்தோனேசியாவின் ஆச்சே (Acceg) நகரத்துக்குச் சென்ற பரமேஸ்வரா அங்கே பாசாய் (Pasai) பகுதி இளவரசியை மணந்ததன் மூலம் முஸ்லிமாக மாறித் தனது பெயரைச் சுல்தான் ஸ்கந்தர் ஸா (Sultan Skandar Shah) என மாற்றிக்கொண்டான். அப்போதைய மலாயாத் தீபகற்பத்தில் இவனே முதல் முஸ்லிம் சுல்தான்.
பரமேஸ்வரா, சுல்தான் ஸ்கந்தர் ஸா என முஸ்லிமாக மாறினாலும் அரண்மனையிலும் வாணிபத்திலும் வெற்றிகரமாக இருந்த தமிழர்கள் யாரும் மதம் மாறாமல் இந்துக்களாகவே இருந்தார்கள். தங்களுக்கென்று சிறிய கோயில் ஒன்றையும் கஜபதி அம்மான் என்னும் பெயரில் இவர்கள் ஏற்படுத்திக்கொண்டார்கள்.
வர்த்தக நிமித்தம் வந்த இவர்கள் திரும்பவும் தமிழகம் திரும்பாமல் இங்கேயே தங்க வேண்டிய சூழல் உருவாகியது. தமிழகத்திலிருந்து பல்வேறு உணவுப் பொருட்களைப் பருவக்காற்றை ஒட்டிவந்த கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்து வியாபாரம் செய்துள்ளார்கள்.
வர்த்தகர்களாக வந்த இவர்களில் வெகு சிலரைத் தவிர மற்றவர்கள் பெண்களை அழைத்துவரவில்லை. இதன் காரணமாக இங்கே மலாய்ப் பெண்களை மணமுடித்துக்கொண்டார்கள். அப்போது சீனாவிலிருந்தும் மலாக்கா துறைமுகத்துக்குப் பெருமளவில் கப்பல்கள் வரத் தொடங்கின. அப்படி வியாபாரம் நிமித்தம் வந்த சீனர்களோடு உறவு நீடித்ததால் சீனப் பெண்களையும் இந்தத் தமிழ் வாணிபர்கள் மணமுடித்தார்கள்.
அரண்மனையில் அரசியல் செல்வாக்கும் பொருளாதாரத்தில் மேன்மையும் கொண்டிருந்த இவர்களை மணந்துகொள்ள மலாய், சீன இனப் பெண்கள் முன்வந்தது ஆச்சரியமல்ல.
போர்த்துக்கீசியர்கள் (1511 - 1641) மலாக்காவைக் கைப்பற்றியபோதும் மலாக்கா செட்டிகளின் செல்வாக்குக் குறையவில்லை. போர்த்துக்கீசியர்களுக்கு அணுக்கமாக இருந்துவந்துள்ளார்கள். ஏறக்குறைய 130 ஆண்டுகள் மலாக்கா நகரம் போர்த்துக்கீசியர்களின் ஆட்சியில் இருந்தபோது இங்கே மத மாற்றங்கள் நிகழ்ந்தன. வியாபாரத்தைவிட மதமாற்றத்தில்தான் போர்த்துக்கீசியர்கள் அதிகக் கவனமுடையவர்களாக இருந்துள்ளார்கள் என்பது வரலாற்று உண்மை. இந்தியாவில் அவர்கள் வந்த இடங்களிலும் இதுதான் நடந்துள்ளது.
இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பெரும் பகுதித் தமிழர்கள் தங்களின் இந்து மதத்திலிருந்து மாறவே இல்லை. பிற இனப் பெண்களை மணந்தபோதும் அவர்கள் கோயில் வழிபாடு போன்றவற்றை விட்டுக்கொடுக்காமல் இருந்துள்ளார்கள்.
வெகு சிலர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். மலாய், சீன இனப் பெண்களைப் போர்த்துக்கீசியர்கள் மணந்துகொண்டார்கள். இந்தியாவில் உள்ள ஆங்கிலோ - இந்திய இனத்தைப் போல இங்கே ‘போர்த்துக்கீசியர்’ என்ற தனி இனம் ஒன்று உருவாகியது. இன்றும் போர்த்துக்கீசியர்கள் என்ற அடையாளத்துடன் இவர்கள் வாழ்கிறார்கள். போர்த்துக்கீசியர் காலனி என்றே அரசாங்கம் அதிகாரபூர்வமாக இவர்கள் வாழும் இடத்தை அறிவித்துள்ளது. இவர்களுக்கு அரசியல் சட்டப்படி ‘பூமி புத்ரா’ (மண்ணின் மைந்தர்கள்) என்னும் அந்தஸ்தும் தரப்பட்டுள்ளது.
மலேசியாவின் அரசியல் அமைப்புச் சட்டப்படி 1957இல் நாடு சுதந்திரமடைந்தபோது மலாய்க்காரர்களுக்கு அரசியல் சாசனத்தில் தனிச்சலுகைகள் வழங்கப்பட்டன. கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, அரசாங்கக் குத்தகைகள் அனைத்திலும் இந்தச் சிறப்புச் சலுகைகள் ஏற்படுத்தப்பட்டன. பின்தங்கிய சமூகம் என்று அப்போது இதற்குக் காரணம் கூறப்பட்டது.
இந்தச் சிறப்புச் சலுகை பெறும் இனமாகப் போர்த்துக்கீசியச் சமூகமும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
இதில் பெரிய சோகம் என்னவென்றால் 1511இல் வந்து இங்கே மதமாற்றங்கள் செய்தபோதும் இங்குள்ள பெண்களை மணந்தபோதும்தான் இப்போதுள்ள போர்த்துக்கீசிய சமூகம் உருவானது. ஆனால் ‘பரமேஸ்வரா’ என்ற இந்து மன்னனாகவும் பிறகு மலாயாவின் முதல் முஸ்லிம் சுல்தானாகவும் அதிகாரபூர்வமாக மலாய் வரலாற்றில் கூறப்பட்டவனின் அரசாங்கத்தில் 14ஆம் நூற்றாண்டிலேயே முதலமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இருந்த ‘மலாக்கா செட்டிகளுக்கு’ பூமி புத்திரா அந்தஸ்து வழங்கப்படாதது ஏன்? இதை இங்கே உள்ள இந்திய அரசியல் கட்சிகளும் பேசவில்லை. மலாக்கா செட்டிகளும் இதைப் பற்றிப் பேசவில்லை. அல்லது பேசச் சரியான தலைமைத்துவம் அவர்களிடம் இல்லை.
போர்த்துக்கீசியர்கள் 1511இல் மலாக்காவைக் கைப்பற்றியபோது அவர்கள் ஒரு புதிய வரைபடத்தை உருவாக்கியுள்ளார்கள். அதில் கடற்கரையோரம் அமைந்த ஒரு கிராமத்தை ‘கம்போவ் கிலீவ்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். கலிங்கப்பட்டணத்திலிருந்து வந்த தமிழர்களை ‘கிலீவ்’ என்றே மலாய்க்காரர்கள் அழைத்தார்கள். அக்காலத்தில் கௌரவமான சொல்லாக இருந்த இந்த ‘கிலீவ்’ இன்று தமிழர்களை இழிவுபடுத்தும் சொல்லாக மாறிவிட்டது.
போர்த்துக்கீசியர்களோடு மலாக்கா செட்டிச் சமூகம் புரிந்துணர்வுடன் செயல்பட்டுள்ளது. போர்த்துக்கீசியக் கடற்படைத் தலைமைத் தளபதி அல்பான்சோ டி அல்புகர்க் எழுதியுள்ள குறிப்பில் மலாக்காவை அங்குள்ள மக்களிடம் இணக்கமாக அரசாட்சி நடத்த மலாக்கா செட்டி சமூகம் கணிசமாக உதவியதால் உயர்பதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகக் குறித்துள்ளார். இவ்வாறு கைகோத்துச் செயல்பட்டதால் மலாக்கா செட்டிச் சமூகம் தங்குதடையின்றி வாணிபம் செய்ய முடிந்துள்ளது.
1641இல் டச்சுப் படை மலாக்காவைப் போர்த்துக்கீசியரிடமிருந்து கைப்பற்றியது. 1824 வரை டச்சு அரசாங்கத்தில் ‘மலாக்கா செட்டி’ சமூகம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. டச்சுக்காரர்கள் வாணிபத்தைத் தங்கள் வசம் எடுத்துக்கொண்டார்கள். அதுவரை வாணிபத்தில் முதலிடத்தில் இருந்த இவர்களின் வாழ்க்கை முறை படுமோசமாகி வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தை நாட வேண்டிய சூழலிலிருந்து தொடங்கி இவர்களின் வீழ்ச்சி ஆரம்பித்தது.
‘கம்போவ் கிலீவ்’ என்ற வியாபார இடத்தை டச்சுக்காரர்கள் மலாக்கா செட்டிகளிடமிருந்து பறித்து அதற்கு டச்சுக் கிராமமென்று மறுபெயர் சூட்டினார்கள்.
மலாக்கா செட்டிகள் இந்து மதத்தில் பிடிவாதமாக இருந்த காரணத்தால் டச்சுக் கவர்னர் போர்ட் (ஙிஷீக்ஷீt) 15,879 சதுர அடி கொண்ட நிலத்தைக் கோயில் கட்டுவதற்கு வழங்கியுள்ளார். 1781இல் டச்சு அரசாங்கக் கெசட்டில் இது நிரந்தரப் பட்டாவுடன் கூடிய நிலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான குறிப்பு உள்ளது.
‘ஸ்ரீபொய்யாத விநாயகர் மூர்த்தி’ என்னும் பெயரில் இக்கோயில் கட்டப்பட்டது. எழுத்துபூர்வமான மலாயா வரலாற்றில் இதுவே இப்பிரதேசத்தில் கட்டப்பட்ட முதல் இந்துக் கோயில் - இன்றும் வரலாற்றுச் சின்னமாக உள்ளது. மலாக்கா செட்டிகளின் ஆதி வரலாறு இது.
ஐந்திலிருந்து ஏழு தலைமுறைகளுக்குப் பின்னர் அவர்களின் இப்போதைய நிலை என்ன?
1962ஆம் ஆண்டிலும் 1999ஆம் ஆண்டிலும் இரண்டு முறை அவர்களின் இருப்பிடம் சென்று சில ஆய்வுகள் செய்துள்ளேன். இப்போது இந்தக் கட்டுரைக்காகவும் அங்கே சென்று வந்தேன்.
சீன - மலாய் இனத்தவரோடு கலப்பு மணம் செய்த காரணத்தால் தங்களின் தாய்மொழியான தமிழை அவர்கள் முற்றாக இழந்துவிட்டார்கள். பல்வேறுபட்ட பண்பாட்டு மாற்றங்களுக்குப் பிறகும் அவர்கள் இன்றும் தங்களை இந்து மதத்தவர் எனக் கூறிக்கொள்வதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். தொழில் நிமித்தம் தலைநகர் கோலாலம்பூர், சிங்கப்பூர், பினாங்கு என்று போய்விட்டாலும் இன்றும் சித்திரை மாதம் ஸ்ரீமுத்து மாரியம்மன் திருவிழாவில் கலந்துகொள்வதைக் கடமையாகக் கொண்டுள்ளார்கள்.
மலாக்கா கஜபெராவ் என்னும் இடத்தில் இன்றும் 100 குடும்பத்தினர் ஒரே இடத்தில் வசிக்கிறார்கள். தியாகராஜன் என்பவர் இவர்களுக்குத் தலைவராக உள்ளார் - ‘கஜபெராவ்’ என்று அதிகாரபூர்வ நகராக உள்ள இந்த இடம் முற்காலத்தில் ‘காஞ்சிபுரம்’ என்றே விளங்கியுள்ளது.
தலைவர் தியாகராஜனின் மனைவி சீன வம்சா வழியில் வந்த மலாக்கா செட்டியாவார். வீட்டில் சேலை கட்டுகிறார். பூஜை அறையில் அனைத்து இந்துக் கடவுள்களும் இருக்கிறார்கள். அந்த அறையை எனக்குக் காட்டினார்கள். பெருமிதமும் மகிழ்ச்சியும் பொங்க அவர் தேவாரத்தை ராகத்துடன் பாடினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தேவாரம் பாடத் தெரிந்த இவருக்கு ஏன் தமிழ் தெரியவில்லை. எழுதப்பட்ட ஒரு தாள் அவர் கையில் இருந்தது. எட்டிப் பார்த்தபோதுதான் உண்மை தெரிந்தது. ஆங்கில எழுத்துருவில் எழுதப்பட்டிருந்த தேவாரத்தைத்தான் அவர் பாடியுள்ளார்.
அவர்களுக்கு ஒரே மகள். திருமணம் முடிந்துவிட்டது. திருமண ஆல்பத்தைக் காட்டினார்கள். இந்து ஆகமங்கள் சிறிதும் வழுவாத கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. படத்தில் அனைவரும் வேட்டி, சேலை உடுத்திக் கூட்டமாக இருக்கிறார்கள். மாப்பிள்ளை தாலி கட்டுகிறார். அவர் முகம் அசல் தமிழ் முகமாக இருந்தது.
இவர் ‘மலாக்கா செட்டி’ சமூகத்தவரா என்று தலைவர் தியாகராஜனிடம் கேட்டேன்.
“இல்லை அசல் தமிழர்” என்றார்.
“எப்படி?”
“நாங்கள் எங்கள் மொழியை ஏழு தலைமுறைகளாக இழந்துவிட்டோம். இந்து மதம் மட்டுமே எங்களை அடையாளப்படுத்த எங்கள் மூதாதையர்கள் விட்டுச் சென்ற பெரிய சொத்து. அதை விடாமல் காலங்காலமாகக் காத்துவருகிறோம். எங்களை அடையாளப்படுத்த ஐந்து பெரிய கோயில்களைக் கட்டியுள்ளோம். ஐந்து சிறிய ஆலயங்களும் உள்ளன. பண்பாட்டு மாற்றத்தால் நாங்கள் தமிழ்மொழியை இழந்துவிட்டோம். இனியும் அப்படி இருக்க முடியாது. அதனால் தமிழ் படித்த இளைஞர்களுக்கே எங்கள் பெண்களைத் திருமணம் செய்துவைக்கிறோம். எங்கள் பேரப்பிள்ளைகளாவது தமிழ் தெரிந்தவர்களாக மாறிவிட இதை ஒரு வாய்ப்பாகக் கருதுகிறோம். மிக உறுதியாகத் தியாகராஜன் பேசினார்.
மொழியை இழந்துவிட்ட சோகம் அவரின் குரலில் தெரிந்தது. அவர் மனைவி சீனத்தை இழந்துவிட்டாலும் தன் கணவரின் தாய்மொழிதான் தனது மொழி என்பதில் உறுதியாக இருந்தார். மொழி இழப்பு என்பது எவ்வளவு சோகமானது என்பது நம்மில் பலருக்கு விளங்குவதில்லை. தனது தாய்மொழியை இழந்த இந்த மலாக்கா செட்டிகளை அவர்கள் ஒருமுறை வந்து பார்த்தால் அதன் முக்கியத்துவம் புரியும்.
தியாகராஜன் தன் வீட்டின் எதிர்ப்புறமிருந்த ஒரு வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார். தமிழ் தெரிந்த இளைஞரை மணந்து மூன்று பிள்ளைகளுடன் குடும்பமாக அமர்ந்து ஒரு ஞாயிற்றுக்கிழமையில் உணவு சாப்பிட்டுக் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் தமிழ் பேசுகிறார்கள். வீட்டில் இந்துக் கடவுள்களும் சீனக் கடவுள்களும் பக்கம் பக்கமாக இருந்தார்கள். அந்தப் படங்களுக்கு வைக்கப்பட்ட வாழைப்பழங்களில் சீன ஊதுவத்திகள் புகைந்துகொண்டிருந்தன - பண்பாட்டு மாற்றம் ஒன்று அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது. இதில் திடுக்கிடும் மிகப் பெரிய ஒரு செய்தியைத் தலைவர் தியாகராஜன் என்னிடம் கூறியபோது என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
“நாங்கள் முதலியார் சாதியைச் சேர்ந்தவர்கள். எங்கள் மகளை ஒரு முதலியாருக்குத்தான் திருமணம் செய்துகொடுத்துள்ளேன். எந்தக் காரணம் கொண்டும் சாதியை விட்டுக்கொடுக்கக் கூடாது” என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். இப்படி அவர் கூறியபோது சாதி பற்றிய பெருமிதம் அவர் முகத்தில் தாண்டவமாடியது.
“உங்கள் மனைவி சீனச் சமூகத்தவர்போல் இருக்கிறாரே. அவர் என்ன சாதி?”
அவர் அந்தக் கேள்வியை எதிர்பார்த்தவர்போலவே என்னைப் பார்த்துச் சிரித்தார்.
“என் மனைவியின் அப்பா முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். அதனால்தான் என் அப்பா இந்தக் கலியாணத்தை நடத்தினார்.”
அவருக்குத் தமிழ் தெரியவில்லை. மலாய் மொழியிலும் ஆங்கிலத்திலும் என்னிடம் உரையாடினார். ஆனால் சாதி பற்றிச் சொல்லும்போது ‘முதலியார்’ என்று அழுத்தமாகத் தமிழில் கூறினார்.

1824இல் ஆங்கிலேயர்கள் மலாக்காவைக் கைப்பற்றினார்கள். காலனித்துவ ஆட்சியில் அரசாங்கத்தின் சாதாரண வேலைகளில் இவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. 1941 வரையில் ஜப்பானியர் படையெடுப்புக்கு முன்புவரை இவர்களின் வாழ்க்கை சிறிது மாறியது.
1957இல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இவர்கள் இந்திய அரசியல் கட்சிகளாலும் இந்து சங்க அமைப்புகளாலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களே கோயில்கள் கட்டிக்கொண்டு தீபாவளி, பொங்கல், மாரியம்மன் திருவிழா என வாழ்ந்துவருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் என்று தங்கள் பிள்ளைகளுக்குக் கோயில்களில் வகுப்பு நடத்துகிறார்கள். தங்கள் மூதாதையர்கள் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் விட்டுச்சென்ற இந்து மதப் பண்பாட்டை விடாமல் காப்பதில் அவர்கள் யாருடனும் சமரசம் செய்துகொள்ளத் தயாராய் இல்லை. இப்போது தங்கள் தாய்மொழியை மீட்டெடுக்கும் ஆவலோடு தங்கள் பிள்ளைகளைத் தமிழ் தெரிந்த முதலியார்களுக்கே திருமணம் செய்துவைக்கப் பெரும்பாடுபடுகிறார்கள். உணவு வகையில் தமிழ் வகை உணவுகளையே கடைப்பிடிக்கிறார்கள்.
அரசாங்கம் ‘மலாக்கா செட்டி’ என்ற இவர்கள் வாழும் பகுதியைச் சுற்றுலாப் பகுதியாக்கியுள்ளது. இவர்கள் வாழும் பகுதியின் நுழைவாயில்கூட இந்து மதக் கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பற்றி ஒரு குறிப்பையும் இங்கே பளிங்குக்கல்லில் வைத்துள்ளார்கள். இவர்களின் அடையாளங்களைக் காணச் சிறிய மியூசியமும் உள்ளது.
மிக மென்மையானதாகவும் அன்பின் அடையாளமாகவும் இந்தச் சமூகம் உள்ளது. இவர்கள் அமைதியானவர்கள். இந்த அமைதிதான் இவர்களுக்கு எதிரியாகவும் இருக்கிறது.
மலேசிய சுற்றுலாத் துறை தங்களைக் காட்சிப் பொருளாக ஆக்கிய அளவு தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இவர்களின் கவலையாக இருக்கிறது. ஒருவேளை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இந்த மலாக்கா செட்டி சமூகம் இதேபோல் இருந்தால்தான் அத்துறைக்கு இலாபமாக இருக்கக்கூடும்.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Tamils in Malacca

Post by Pratyaksham Bala »

Thanks !
Interesting article.
(பீர்முகம்மது அவர்களுக்கும் நன்றி.)

Google search of 'Melaka Chitty Village' leads to a number of interesting image & video links.

Rsachi
Posts: 5039
Joined: 31 Aug 2009, 13:54

Re: Tamils in Malacca

Post by Rsachi »

Interesting information but i am stupid and can't read Tamil.
I was however greatly fascinated by a character sequence which seems right out of the Pyramids:
கட்டப்பட்டது

What is this and how does one pronounce it, sirs?

harimau
Posts: 1819
Joined: 06 Feb 2007, 21:43

Re: Tamils in Malacca

Post by harimau »

Rsachi wrote:Interesting information but i am stupid and can't read Tamil.
I was however greatly fascinated by a character sequence which seems right out of the Pyramids:
கட்டப்பட்டது

What is this and how does one pronounce it, sirs?
By that token, each one of us is stupid in everything except our mother tongue and English!

It is the fascinating story of Tamils who have been living in Malacca for more than six centuries, how they have intermarried with the local Malay and Chinese women, how they have lost their native language Tamil, how they resolutely consider themselves Hindus and thus celebrate with gusto Hindu festivals, etc.

The word you had quoted is pronounced kattap pattathu and means constructed.

This angular form of Tamil writing is more the property of the font that is used. In handwriting, many of the angles soften into chamfered corners. In fact, the old Tamil inscriptions in South Indian temples employ Vattezhuthu, literally, rounded letters.

I hope somebody translates the story into English for all of you to learn about Indo-Malay history.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Tamils in Malacca

Post by Pratyaksham Bala »

Here is the Google translation of the article !
https://translate.google.co.in/translat ... rev=search

Basic information on 'Melaka Chitties' :-
https://en.wikipedia.org/wiki/Chitty

A detailed write-up :-
http://journalarticle.ukm.my/357/1/1.pdf

Rsachi
Posts: 5039
Joined: 31 Aug 2009, 13:54

Re: Tamils in Malacca

Post by Rsachi »

Harimau,
i went to Malacca a couple of times. I in fact met there a beautiful doctor woman in her twenties, called Valar (full name Valarmathi) whose father is Indian Tamil and mother Chinese.
ಕಟ್ಟಲ್ಪಟ್ಟಿತು. In Kannada.

kvchellappa
Posts: 3597
Joined: 04 Aug 2011, 13:54

Re: Tamils in Malacca

Post by kvchellappa »

Have you written tup tup in Sirigannadam? Otherwise, tiger may not show interest. (kattallittithu?)

rshankar
Posts: 13754
Joined: 02 Feb 2010, 22:26

Re: Tamils in Malacca

Post by rshankar »

Pratyaksham Bala wrote:Here is the Google translation of the article !
https://translate.google.co.in/translat ... rev=search
Sri PB - the translation is hilarious to read, and actually tedious as well!!

Post Reply