திருத்தல தரிசனம் !

Post Reply
venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

திருத்தல தரிசனம் !

Post by venkatakailasam »

திருத்தல தரிசனம் ! Shared from Krishnamurthy Krishnaiyer...

கோயம்பத்தூரிலிருந்து மத்யானம் கிளம்பும் போதே அரை மணி நேரம் தாமதம். போதாத குறைக்கு சிட்டிக்கு உள்ளேயே ஒன்றிரண்டு வேலைகள். அடுத்ததாக பெட்ரோல் பில்லிங், ஏர் செக்கிங். சூலூர், பல்லடம், காங்கேயம், வெள்ளகோவில் வழியாக கரூரை அடைந்து, பை பாசை தவிர்த்து ஊருக்குள் சென்று, அடையார் ஆனந்த பவனில் போண்டா, பணியாரம், காபி. என்ன விரட்டியும் குளித்தலை சேரும் போது சாயங்காலம் மணி ஆறுக்கு மேல் ஆகிவிட்டது.

கடம்பந்துறை. சோழ நாட்டு *இரண்டாவது தென் கரைத் தலம். கல்வெட்டில் 'குளிர்த் தண்டலை' என குறிக்கப் பட்டிருக்கிறது. ஸ்வாமியின் திருநாமம் கடம்பவனேஸ்வரர், கடம்பவன நாதர். இறைவி பாலகுஜாம்பாள், முற்றிலா முலையம்மை. ஸ்தல வ்ரிக்ஷம் கடம்பு, தீர்த்தம் (வேறு என்ன?) காவிரி. அப்பரால் பாடப் பெற்ற ஷேத்ரம்.

அம்பாள் சன்னதியை கடந்துதான் மூலவர் தரிசனம். சப்த கன்னிகைகளின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான தலமாகையால் ஸ்வாமியின் பின்னால் அவ்வெழுவரின் பிம்பங்கள் கல்லில் செதுக்கப் பட்டுள்ளன. வேறு சில விசேஷங்களும் உண்டு.

'உள்ளே வரலாமா?'. குருக்கள் நிமிர்ந்து எங்களை உற்றுப் பார்த்தார். 'நீங்க கீதா.....சித்ரா தானே?'. ஒரு சில நொடிகள் குழப்பம், சிந்தனை. 'சார், நீங்களா?'. அவர் வங்கியில் உயர் அதிகாரியாக இருந்தவர். பல வருடங்களுக்கு ரிட்டயர் ஆனவர். இப்போது அவருடைய சர்வ லக்ஷணங்களும் மாறிப் போய் கோவிலில் பூஜை. தீப ஆராதனை முடிந்ததும் வீட்டிற்கு வாருங்கள் என்றார். நேரம் ஆகிவிட்டது என்று மெலிதாக மறுத்தும் விடாப் பிடியாக கூட்டிக் கொண்டு போனார். வீட்டின் பக்கவாட்டு அறையில் இருந்து மந்திர சப்தங்கள் கேட்டது. அவருடைய மகன்கள் இருவரும் ஆகம முறைகளை மாணாக்கர்களுக்கு கற்றுக் கொடுப்பதாக சொன்னார். எவ்வளவு தடவை கேட்டும் தன்னையோ, அந்த வகுப்பரையையோ படம் பிடிக்க அனுமதிக்கவில்லை. விளம்பரம் தேவை இல்லை என்றார். இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவருடைய குடும்பத்தார் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு, மீண்டும் பை பாஸ் பிடித்து திருப்பராய்த்துறை நோக்கி பயணம்.

திருத்தல தரிசனம் 2 !

திருப்பராய்த்துறை வந்து விட்டது என்பதை எளிதில் காட்டிக் கொடுத்து விடும் செம்மண் நிற ராமகிருஷ்ண மடம். அதை தாண்டியவுடன் அடுத்த திருப்பத்திலேயே பராய்த்துறை தலம். உள்ளே நுழையும் போதே ஏழு நிலை கோபுரத்தின் பிரம்மாண்டமும், கோவிலின் விஸ்தீரணமும் அசத்துகிறது.

முதலாம் பராந்தகன் காலத்தில் கட்டப்பட்ட சோழ நாட்டு மூன்றாவது தென்கரை ஸ்தலம். பராய் மரக் காட்டில் இறைவன் எழுந்தருளி இருப்பதால் 'பராய்த்துறை நாதர்'. சமஸ்க்ரிதத்தில் 'தாருகா வனம்'. ஈசன் பீக்ஷாடனராய் சென்று தாருகா வன முனிவர்களின் கர்வத்தை அடக்கி அவர்களுக்கு அருள் புரிந்தமையால் 'தாருகா வனேஸ்வரர்'. இந்திரன், குபேரன், சப்த ரிஷிகள் பூஜித்து பேறு பெற்ற ஷேத்ரம். அன்னையின் நாமம் ஹேமவர்ணாம்பாள், பசும் பொன் மயிலாம்பாள். ஸ்தல வ்ரிக்ஷம், தீர்த்தம் - தெரிந்ததுதானே. அப்பர், சம்பந்தரால் பாடப் பெற்ற தலம்.

கொடிமரம், பலி பீடம், நந்திகேஸ்வரர் சேர்ந்திருக்கும் நந்தி மண்டபம். இம்மண்டப தூண்களில் அப்பர், சம்பந்தர், மாணிக்க வாசகர் மற்றும் திருப்பணி செய்த செட்டியாரின் உருவங்களும் உள்ளது.

வெளிப் பிராகாரத்தில் விநாயகர், தண்டபாணி. அடுத்த மண்டபம் ஐந்து நிலைகளை உடையது. நேரே கிழக்கு நோக்கிய மூலவர் சன்னதி. உள்சுற்றில் வலம்புரி விநாயகர், சப்த கன்னியர், அறுபத்து மூவர், சோமஸ்கந்தர், மஹா கணபதி, பஞ்ச பூத லிங்கங்கள், ஆறுமுகர், பீக்ஷாடனார், பிரம்மா, துர்க்கை, கஜலக்ஷ்மி, பன்னிரு கைகளுடன் மயிலேறிய ஷண்முகர், நவக்ரகங்கள், பைரவர். கோஷ்டத்தில் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, அர்த்த நாரிஸ்வரர், பிரம்மா, துர்க்கை. சண்டேஸ்வரர், நடராஜர்....துவார பாலகர்களை கடந்து உள்ளே சென்றால் மூலவர் தரிசனம். அம்பாள் சன்னதி தெற்கு நோக்கி. தூண்களில் ஊர்த்துவ தாண்டவம், எதிரில் காளி.

தரிசனம் முடித்து வெளியே வந்து கொடிமரத்தின் முன் வடக்கு நோக்கி வீழ்ந்து வணங்கி, அவசர அவசரமாய் புறப்பட்டு காரில் ஏறி திருச்சி. அங்கு ராத்தங்கல். மறுநாள் காலை முதல் ஷேத்ரம் - கோவிலடி. நன்றாகத்தான் பேர் வைத்திருக்கிறார்கள். கோவில்ல அடி. வயதான பட்டர் என்னை உண்டு இல்லை என்று பண்ணி விட்டார். வரும்.

திருத்தல தரிசனம் 3 !

கோவிலடி. பட்டர் என்னை காய்ச்சி உருக்கி விட்டார் என்று முந்தய எபிசோடில் எழுதி இருந்தேன். அதெல்லாம் அப்புறம். இப்போது ஸ்தல புராணம்.

திருச்சி - தஞ்சை மாற்றுப் பாதையில் திருப்பேரில் உள்ளது அப்பால ரங்கநாதன் ஆலயம். (திருச்சி-கல்லணை-கோவிலடி-திருக்காட்டுப்பள்ளி-கண்டமங்கலம்-வரகூர்-திரு ஆலம் பொழில்-திருப்பூந்துருத்தி-(திருவையாறு)-கண்டியூர் வழியாகவும் தஞ்சையை அடையலாம்).........போன தடவை திருஆனைக்காவில் இட்லி ஸ்பாட்டில் சாப்பிட்டு காபி குடித்து விட்டு சாயங்காலம் ஆறரை மணி அளவில் இப்பாதையில் சென்றது திகில் இரவாகியது. மழை, இருட்டு, கரடு முரடான பாதை, குறுகிய கல்லணை பாலம், வரிசையாய் லாரிகள், வளைந்து நெளிந்து வளர்ந்து கொண்டே போன ஆள் அரவமற்ற சாலை, விளக்கின் ஒளியில் பேயாய், பிசாசாய் காரில் மோதி மறைந்த பிம்பங்கள். நன்றாக வாங்கி கட்டிக் கொண்டேன். 'பை பாஸ்ல போக வேண்டியதுதானே. இந்த ராத்திரியில் யார் கோவில தொறந்து வச்சிருக்கப் போறா'. ஹும், இருபது 'டேய் மாதவா' எபிசோடுகள் ஒன்றரை மணி நேரத்தில். பின் சீட்டில் இருந்தவர்களிடமிருந்து பேச்சு மூச்சே இல்லை.....சரி, சரி அதெல்லாம் இப்போ எதற்கு, நாம் தான் அதிகாலை ஏழரை (!) மணிக்கே சென்று விட்டோமே. பட்டர் வருவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறது. அதற்குள்...

உபமன்யு மகரிஷி வ்யாக்ரபாதரின் புதல்வர், வசிஷ்டரின் மருமகன். இவரின் தாயாரின் மார்பில் பால் சுரக்காமல் இருக்க, ஈசன் திருப்பாற்கடலின் பாலையே கொண்டு வந்து கொடுத்தாராம். அப்படிப்பட்ட இவர், 'முணுக்' என்றால் கோபம் அதனால் சாபம் எனும் துர்வாச முனிவரின் எரிச்சலுக்கு உள்ளாகி, விமோசனமாக பலாச வன ஷேத்திரத்தில் லக்ஷம் பேருக்கு அன்னதானம் என்று எஸ்கேப் ரூட் பெற்று பிரம்மாண்ட புராணத்தில் குறிப்பிடப்படும் புரசை (பலாச) வன ஸ்தலமாகிய திருப்பேர் வந்து சேர்ந்து அன்னதானம் செய்து வரும் நேரத்தில் எம்பெருமான் நாராயணன் கிழ வேடம் பூண்டு அனைத்து அன்னத்தையும் உண்டு விட, 'வாட் எல்ஸ் ஷுட் ஐ ஆபர் யு?' என்று இவர் கேட்க, ஒரு குடம் அப்பம் வேண்டும் என்றாராம் சர்வ லோக சரண்யன். இவரும் அவ்வாறே அப்பம் அளிக்க சாபம் தீர்ந்தது. கோவிலடியில் உறையும் எம்பெருமானுக்கு 'அப்பக்குடத்தான்' என்ற திருநாமமும் வழங்கப் படலாயிற்று. இவருக்கு 'புஜங்க சயனர்' என்கிற நாமமும் உண்டு. இவரின் இரவு போஜனம் ஒரு குடம் அப்பம். மறு நாள் அதுவே பிரசாதம்.

தாயார்-கமலவல்லி, இந்திர தீர்த்தம், ஸ்தல வ்ரிக்ஷம்-வில்வம், இந்திர விமானம், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், திருமிழிசை ஆழ்வாரால் மங்களா சாசனம். முதல் இருவரும் மோக்ஷம் பெற்ற தலம்.

'என்ன, திருத்துழாயா, இப்படி கொடு'. மூன்று சரங்களையும் வாங்கிக் கொண்டு விட்டார். என்னவோ நினைத்துக் கொண்டு 'ஸ்வாமி, தாயார்......' 'தாயாருக்கு திருத்துழாய் கிடையாது, எல்லாம் பெருமாளுக்கு தான்'. 'சரி'. தீபம் காட்டினார். 'ஸ்ரீரங்கத்தில இவ்வளவு பக்கத்துல பாக்க முடியுமா, இப்போ நன்னா பார்த்துக்கோ. திருவடி தரிசனம், அருகில் தாயார், இரு புஜங்கள், அனந்த சயனம்.......அப்பக்குடம் ....திவ்யம். 'திருப்தி'. 'என்ன சொன்னே? இன்னொரு தடவை அப்பிடி சொல்லிடாதே, தாயார் 'உம், கொடும்' (இங்கயுமா?) னு சொன்னா அள்ளி அள்ளி கொடுப்பான் எம்பெருமான். அதனால, கடைசி மூச்சு இருக்கற வரைக்கும் அவன் சன்னதில 'திருப்தி' ன்னு சொல்லிடாதே. 'சரி'. 'தீர்த்தத்தை குடிச்சுட்டு கண்ல ஒத்திக்கோ, தலைல தெளிச்சுக்காதே, அதுல நான் சடாரி வைக்க முடியாது'. 'சரி'. அடுத்தது, தாயார் சன்னதி. ஆரத்தி. கதவை மூடும் சமயத்தில் 'இன்னொரு தடவை தாயாரை பார்த்துக்கறேன்'. 'என்னது, தாயாரை பார்த்துக்கறையா?, சேவிச்சுக்கறேன்னு சொல்லு. 'சரி'. 'நெக்ஸ்ட் டைம் இப்படி வராதே'. 'எப்படி?'. 'இது என்ன பான்ட், ஷர்ட். அபிசியல வந்தா அத மட்டும் பண்ணு. ஷேத்ராடனம் வந்தா வேஷ்டி கட்டிண்டு வா' (அதான், இப்போ வாங்கி கட்டிக்கறேனே). 'சரி'. இதோட அஞ்சு 'சரி' ஆச்சா?. இன்னும் ஒன்னு பாக்கி. 'இது மேற்கே பார்த்த சன்னதி. இப்படி நமஸ்காரம் பண்ணு'. 'சரி'.

படிக்கட்டுகளில் வேகமாய் இறங்கி காரில் ஏறி திருக்காட்டுப்பள்ளி நோக்கி விரைந்தேன்

to be continued...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: திருத்தல தரிசனம் !

Post by venkatakailasam »

திருத்தல தரிசனம் 4 !

அடுத்ததாக திருக்காட்டுப்பள்ளி தலத்தை எழுத வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், திருச்சோற்றுத்துறை பற்றி எழுதவே மனம் விழைகிறது. அதன் காரணத்தை கடைசியில் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

சோழ நாட்டின் பதிமூன்றாவது தென்கரைத் தலம். முதலாம் அதித்த சோழன் திருப்பணிகள் செய்துள்ளான். பின் வந்த மன்னர்கள் விளக்கு எரிக்கவும், நிவேதனத்திற்கும், விழாக்கள் எடுக்கவும் பொன்னும் நிலமும் தந்ததை கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

நந்தி தேவரின் திருமணத்தை ஒட்டி மிகப் பெரிய ஊர்வலம் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்தானம் ஆகிய சப்த ஸ்தானங்கள் வழியாக திருவையாற்றை அடைந்து விழா எடுக்கப்படுகிறது. இங்குதான் திருமண வைபவத்தில் பங்கு பெரும் அனைவருக்கும் அன்னம் பாலிப்பு நடக்கும். (ஒவ்வொரு ஊரின் பெயரிலேயே திருமணத்தில் அவ்வூரின் பங்கு என்ன என்பதை சுலபமாக புரிந்து கொள்ளலாம்). இந்திரன், சூரியன், கௌதமர் ஆகியோர் வழிபட்ட ஸ்தலம். ஈசன் ஓதன வனேஸ்வரர், தொலையாச் செல்வர், சோற்றுத்துறை நாதர் என்று அறியப்படுகிறார். உடன் உறைபவள் அன்ன பூரணி, ஒப்பிலாம்பிகை. தீர்த்தம் - காவிரியே தான்.

வெளிச்சுற்றில் தனிக்கோவிலில் அம்பாள் திருமணக்கோலத்தில். (அன்னையின் எதிரில் அவளும் பதியும் ஒய்யாரமாய் அருகருகே அமர்ந்து ஊர்வலம் செல்ல கண்ணாடி பல்லக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது). மூன்று நிலை ராஜ கோபுரத்தின் வலப்பக்கம் கணபதி, இடப்பக்கம் வேலவன். முன் மண்டபத்தில் நடராஜ சபை. அர்த்த மண்டபத்தில் மிகப் பெரிய ஷண்முக சிலா ரூபம். கருவறையில் சோற்றுத் துறை நாதர். (அருகில் உள்ள ஓடையில் வடிக்கப் பட்டு சோறு நிறையுமாம்)

தரிசனம் முடித்து வெளியே வந்தால் மிகப் பெரிய ஆச்சர்யம். நெற்றியில் திரு நீற்றுப் பட்டை அணிந்த ஆணும், பெண்ணுமாய் இருபதிற்கும் மேற்பட்ட குழந்தைகள் திருமுறை பதிகங்களை ஓதிக் கொண்டிருந்தனர். பூஜை செய்துவித்தவர் ஆசிரியருக்கான இடத்தில் அமர்ந்தார். சற்று தயங்கி, பேஸ் புக்கில் போடுவதற்கு படம் பிடித்துக் கொள்ளட்டுமா? என்றேன் (பேஸ் புக் இவருக்கு தெரியுமா என ஐயம்). 'சரி, எடுத்துக் கொள்ளுங்கள். நான் M.C.A படித்திருக்கிறேன். I.T யில் தான் வேலை பார்த்தேன். பத்து வருடங்களுக்கு முன்பாக இத்தலத்திற்கு பல முறை வந்தேன். இந்த சூழல் மிகவும் பிடித்து விட்டது. அதனால் ஆலாய் பறக்கும் வேலையை விட்டுவிட்டு இங்கு அமைதியாய் இருக்கிறேன் என்றார் !

அடுத்த ஆச்சர்யமாக பரம்பரை டிரஸ்டி திரு.Kanna Kans அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவர், அருகாமையில் இருக்கும் தன் வீட்டிற்கு அழைத்துப் போனார். ஸ்ரீ மஹா பெரியவா நான்கு முறை வந்த அகம். பூஜையை தரிசித்து மகிழ்ந்தோம். பக்கத்திலேயே கோ சாலை. அனைத்து பசு, கன்றுக் குட்டிகளுக்கும் பெயர் வைத்திருப்பதாக சொன்னார். (தாய் சேய் பெயர்களை பாருங்கள் - பசு அன்ன பூரணி - கன்றுக் குட்டிகள் பூரணி, புனிதவதி. கோமதி - ஹேமா, திலகவதி. விசாலாக்ஷி - காசி. மற்றும் கௌரி). பேசிக் கொண்டே வெளியே வந்தோம். இருட்டாக இருந்தமையால் கார் வரை டார்ச் அடித்துக் கொண்டே வந்தார். அவரை பற்றி கேட்ட போது தான் M.S (IT), M.Phil (CS), M.Tech (Adv.Comp) படித்திருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலையில் விரிவுரையாளராக இருப்பதாகவும் சொன்னார் !!
*குழந்தைகள் கண்டத்தில் ருத்ராக்ஷம் அணிகிறார்கள். மாமிசம் உண்ணுவதில்லை. அவர்களால் முடிந்த அளவிற்கு உழவாரப்பணி செய்கிறார்கள்.

Post Reply