முறையீடு

Post Reply
vgovindan
Posts: 1937
Joined: 07 Nov 2010, 20:01

முறையீடு

Post by vgovindan »

இறைவா,
சமுசாரத்தில் தளையுண்டு நான்
தவிக்கின்றேனென சாத்திரங்கள் கூறுதய்யா.
சிந்தித்து நோக்கினேன், உண்மையென்னவென்று;
சிரிப்புத்தான் வருகுதய்யா, தளையுண்டது நீயா நானாவென்று.

நீ யாரென அறிந்தபோதே, எனது தளை
நீங்கியதய்யா; உண்மையில்
தளையென்பதே பொய்யென்றறிந்தேனே.
ஆயின் உன் கதை செப்பினாலோ,
என் உள்ளம் இரங்குதய்யா; பாவம்.
யார் பெற்ற பிள்ளையோ, தெரியாமல் மாட்டிக்கொண்டு தவிக்கும் உன் தவிப்பு, என் வருணனையை மிஞ்சுதய்யா.

இத்துணை பரந்த படைப்பினுக்குத் தலைவனும், இப்படைப்பின் உள்ளியக்கமுமாய் நீயிருக்க, இதனை விட்டெங்கு நீ செல்லவியலுமோ, சொல்.

எனதொருவன் உடலில் மட்டும் உண்டன்றோ ஒரு கோடி நூறாயிரத்தினையும் மிஞ்சும் உயிரணுக்கள். என் தளை நீங்கிட, அவ்வனைத்தும் விடுபட்டனவே. ஆயின், கோடானுகோடி உயிரினங்கள் உன்னுள் இருக்க, அவையனைத்தின் தளை நீங்கும்வரை,
நீயென்ன செய்வாயோ?

அஃதன்றி, நான் தளை நீங்கப்பெறினும், உன்னின்று எங்கு செல்ல இயலும்? எனவே, அனைத்து உயிரினங்களும் தளை நீங்கப்பெறினும், உனக்கு விடுதலை என்றுமில்லையன்றோ.

ஆணவத்தின் நாட்டாண்மை நடக்குதய்யா, இவ்வுலகில்; உயிரினங்கள் ஒன்றையொன்று அழித்துக்கொண்டிருக்கும் அவலத்தினை
நீ நாளும் காண்கின்றனை; ஆயின்
அனைத்தையும் நோக்கியும் நோக்காத
நோட்டத்தில் நீயிருக்க, விடிவுகாலமென்றொன்று உண்டோயென உன்னைக் கேட்டிடத் தோன்றுதய்யா.

அணுவினின்றும் அண்டம் வரை அனைத்திலும் நீ பரவியிருக்க, நானிடும் முறை நீயே அறியாமலிருப்பாயோ?

அன்றோர் நாள், போர்க்களத்திடை, நீயுரைத்த - 'கொல்பவனும், கொல்லப்படுபவனும் நானே' யென்ற உன் வசனம் செவிகளில் பறையென ஒலிக்குதய்யா.

யாரிடம் யார் முறையிட? முறையிடுபவனும், முறை கேட்பவனும் ஒருவனே என்றறிந்துகொண்டபின், முறையினுக்கும் பொருளில்லாமற்போச்சே.

எதுகை மோனைகள் நானறியேன்;
எனதுள்ளத்தினைத் திறந்துன்முன் வைத்திட்டேன். சரியும் தவறும் உன்னுள்ளடக்கமன்றோ.

vgovindan
Posts: 1937
Joined: 07 Nov 2010, 20:01

Re: முறையீடு

Post by vgovindan »

முயலகன் நான்தானய்யா, தாண்டவக்கோனே! - என்னை,
முயலகன் ஆக்கியதும் நீர்தானய்யா, தாண்டவக்கோனே!
அணுவினிலும், அண்ட சராசரமனைத்தினிலும்
ஆனந்த நடமாடிடும் தாண்டவக்கோனே! - உமது
நாடகத்திற்கு மேடை வேண்டுமன்றால், நான்தான் கிடைத்தேனோ, தாண்டவக்கோனே!
ஈன்ற தனயனென்றும் என்னைக் கருதாது,
ஈரேழுலகிலும் நினைவிழந்தென்னை உழலச்செய்ததும் முறையோ? தாண்டவக்கோனே!

எனையீன்றெடுத்த தாயே! சிவகாம சுந்தரியே!
உன் கணவனின் களிநடத்தினைக் கண்டு களித்திடவேண்டி,
என்னைப் பணயம் வைத்தனையோ? இதுவும் தகுமோ, சொல்.
உனக்கு அப்பெயர் மிக்கு பொருந்துதம்மா!

முயலகன் - अपस्मार - amnesiac

Pratyaksham Bala
Posts: 4203
Joined: 21 May 2010, 16:57

Re: முறையீடு

Post by Pratyaksham Bala »

அருமை !

vgovindan
Posts: 1937
Joined: 07 Nov 2010, 20:01

Re: முறையீடு

Post by vgovindan »

நினைவு தவறி உழன்றிருந்த என்னை
நினைவு பெறச்செய்தமைக்கு நன்றியய்யா!
நான் முன்செய் தவப்பயனோ, அன்றி
எனது முன்னோரின் ஆசீர்வாதப்பயனோ, அன்றி
உனது திருவடி என்னைத் தீண்டிய பயனோ, அன்றி
எனது தாயின் கடைக்கண் பார்வைப் பயனோ, அறியேன்.
இனியும், அத்திருவடி, அங்கேயே, என் தலைமீதே, இருக்கட்டுமய்யா.
மற்றவர் என்னை இகழ்ந்தாலென்ன, பயித்தியமென்று,
எனக்கும் உனக்கும் உள்ள உறவு, உன்னையன்றி, என் தாயன்றி பிறர் எவரும் அறிவரோ?

vgovindan
Posts: 1937
Joined: 07 Nov 2010, 20:01

Re: முறையீடு

Post by vgovindan »

அத்வைத வேதாந்தம் வெறும் வீடுபேற்றிற்கன்று;
அதுதான் உண்மையான வாழ்க்கையின் தொடக்கம்;
உடல் தளர்ந்து ஏகும்போது உண்மை உணர்ந்தென்ன பயன்?
உடன் வந்து எவரும் சாட்சி சொல்வரோ, வீடு பெற்றானென்று?

உண்மையை உணர்ந்த பின்னர், உலக வாழ்க்கையைத்
துவக்கவேண்டுமென, பிரம்மசரியத்தை முன்வைத்தனர் ஆன்றோர்.
பிரம்மசரியம் என்பதற்கு மாணாக்கப் பருவமெனப் பொருளன்று;
பிரமத்தை அறிந்து, அவ்வழி நடத்தல் என்றுதான் பொருள்.

'மகனே, சுவேதகேது, நீதானடா அது - தத்துவமஸி' - என்று
தன் மாணாக்கனுக்கு ஆசான் உரைத்தான் - அஃது அன்று.
அச்சொல் கேட்டு, அதனை உணரும் வழி தேடி, உணர்ந்தனர்,
அக்காலத்து இருடிகள்; அவர்களே நமது முன்னோடிகளாம்.

அவ்விருடிகள் அனைவரும், உண்மை உணர்ந்தபின்னர்,
அறம், பொருள், இன்பமெனும் அனைத்து மனிதக் குறிக்கோள்களுடன்,
மனைவி மக்களுடன், இல்வாழ்க்கை வாழ்ந்தனரென
மறைகள் உறைக்குமன்றோ! அங்ஙனம் தொடங்கியது இம்மதம்.

அந்த பரம்பரையின் மிச்சம்தான் இன்றைய பிராமண
திருமணச் சடங்கில் காசி யாத்திரை என்பது - இதை உணர்வீர்;
அத்தகைய இல்லறத்தின் வாயிலாகத் தோன்றிய மக்கள்
எத்தகைய சாதனையைத்தான் செய்யமாட்டார்கள் - சொல்வீர்.

ஒரு சங்கரரும், ஒரு விவேகானந்தரும் எப்படி உலகை வழிநடத்த
உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்தனரென நாம் நன்கு அறிவோமன்றோ!
ஆனால் இன்று பிரம்மசரியம் என்பது வெறும் வெத்து வேட்டுத்தான்;
அது வெறும் மாணாக்கப் பருவத்தை மட்டும்தான் குறிக்கும்.

பிரமத்தின் வழிநடக்கக் கற்றுக்கொடுக்காமல், வேதங்களை
மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும், கிளிப்பிள்ளைகள் இக்கல்விமுறை
தோற்றுவிக்கின்றதென்பது நாம் யாவரும் அறிந்த உண்மை;
அத்துடன் முக்குலத்தாரும் குருகுலத்தில் கல்வி பயின்றனரன்றோ?

ஆங்கிலத்தில் ஒர் வழக்கு - 'who will bell the cat?' - என்று
இதை எடுத்துரைத்தால் நானும் வெத்து வேட்டாகத்தான் தோன்றும்.
பொருளீட்டுவதொன்றே இலக்காகக் கொண்ட இன்றைய செக்யுலர்
கல்விமுறை நம்மை எங்கு கொண்டு சேர்க்குமோ, காலம்தான் பதில் சொல்லும்.

vgovindan
Posts: 1937
Joined: 07 Nov 2010, 20:01

Re: முறையீடு

Post by vgovindan »

கோவிலில் இறைவன் இருப்பது கல்லாகவல்ல -
கல்லுருவில் ஓர் குழவியாக, தாயாக, தந்தையாக, ஆசானாக;
தன் குழவியை நீராட்டும் தாயின் அன்பினை,
அக்குழவியாக நாம் இருந்தபோது கண்டது, உணர்ந்தது, நமது
அகத்தினில் என்றுமே அழியாதவோர் நினைவுச் சின்னமன்றோ.
இறைவனை நீராட்டுதல் எத்தகைய பேறோ! இதை உணராது
இறைவன் தலையில் நீரையும், பாலையும், தயிரையும் கொட்டினரே;
இறைவனெனும் குழவிக்கு மூச்சுத் திணருமேயென உணர்வீராயின்
இங்ஙனம் செய்திடத் துணிவீரோ, சொல்லுமய்யா.

vgovindan
Posts: 1937
Joined: 07 Nov 2010, 20:01

Re: முறையீடு

Post by vgovindan »

இறைவன் பேசினால் -
மனிதா,
எனக்கு இலக்கணம் வகுக்கத் துணிந்தனையோ?
நான் யாரென்று, நானே தெரிந்துகொள்ள நினைத்தேனில்லை;
அப்படியிருக்க, நான் யாரென நீ அறிவதெங்ஙனமடா?
அண்ட சராசரத்தில் நிதம் நடக்கும் நிகழ்வுகளுக்கிடையே, நீ எம்மாத்திரமடா?
பல்கோடி பல்லாயிரம் உலகங்களுக்கிடையே,
உன்னுலகம் ஓர் அணுவுக்கீடாகுமோ?
அவ்வுலகில், உயிரினங்கள் கோடானுகோடியடா!
அதனுள் ஓர் சிற்றணுவாக உள்ள உனக்கு எத்தனை ஆங்காரமடா!
தாவர, விலங்கினங்களுக்கு இல்லாத அறிவென்றதோர் சாதனம் உனக்குள் நான் வளர்த்தேனடா.
அச்சிற்றறிவின் துணைகொண்டு, ஆணவத்தைத்தான் வளர்த்துக்கொண்டாயடா!
நான் கண்டேன், நான் கண்டேனென்று தலைக்குத்தலை போட்டியிட்டுக்கொண்டு,
என்னிறைவன் மேலானவன், உன்னிறைவன் மட்டமானவனென,
ஒருவருக்கொருவர் சிண்டைப் பிய்த்துக்கொள்ளும் முட்டாள் மனிதா!
பல்லுலகிலும் உயிரினங்கள் உய்யும் வழி தெரிந்து, என்னுள் திரும்புவீரென,
நான் கண்ட கனவினைச் சிதறடித்த மூட மனிதா,
போதுமிந்த நாடகமென என்னை சிந்திக்க வைத்துவிட்டீர், நன்றி.

vgovindan
Posts: 1937
Joined: 07 Nov 2010, 20:01

Re: முறையீடு

Post by vgovindan »

உள்ளமெனும் தில்லை நகரினில்
உள்ளீரெனக் கேள்விப்பட்டு,
உம்மைக் காண விரைந்து வந்தால்,
ஊருக்குக் காவலாம் ஆங்காரமெனும் எல்லைக்காளி,
ஊர் எல்லையில் என்னை வழி மறித்து
ஊருக்குள் விடமாட்டேன் என்கின்றாளய்யா.
உம்மைக் காணாவும் இயலாது,
உமக்கு செய்தி சொல்லவும் தெரியாது,
வெறுங்கையோடு திரும்ப வைப்பீரோ, அறியேனய்யா.
அன்று நீர் தில்லைக் காளியையடக்க,
அற்புதமாகக் காலைத்தூக்கி நடமாடினீரென,
அறிந்திட்டேனய்யா, அது பெரிதல்ல.
இன்றும் நீர் உளம் நெகிழ்ந்து, எனக்காக
இன்னுமோர் நடமாடி, அவ்வாங்காரக் காளியையடக்கி,
எனக்கருள் புரிந்திடுவீரோ, அன்றி,
இன்று போய் நாளை வாயென்பீரோ, அன்றி,
ஊருக்குள் வரத் தகுதியற்றவன் நீயென்பீரோ,
அறிந்திட இயலாது மயங்குகின்றேனே!

vgovindan
Posts: 1937
Joined: 07 Nov 2010, 20:01

Re: முறையீடு

Post by vgovindan »

இறைவா,
படைப்பிற்கு நீ விழைந்தால், அதில்
என்னையேன் உளைய வைத்தாய்?
நீயே நான் என்பதெல்லாம் வெறும் பசப்பு;
நான் இங்கு அவதிப் பட்டுக்கொண்டிருக்க,
நீயங்கு அரவணையில் ஆனந்தத் துயில் கொண்டுள்ளாய்.
ஆனந்தமெனும் பேரின்பத்தினை
நீயங்கு அனுபவித்துக்கொண்டிருக்க,
அவ்வானந்தத்தினை சிதைத்துப் பொடியாக்கி,
சிற்றின்பம் என்ற பெயரில் உலகெங்கும் என்னை தேடச்செய்து,
அதனைக் காணாது ஆயிரமாயிரம் பிறவிகளெடுத்து என்னைக் களைத்திடச் செய்வதும் முறையோ, சொல்.
போதுமய்யா, போதும். உனது பொய்த் தூக்கத்தினை சற்று நிறுத்தி
எனது துயரினைக் களைந்திட வழி செய்வதுன் கடனாகும்.
இனியும் தாமதித்து, உன்னை ஏசும்படி செய்திடாதே.
உனக்கென்ன, எனது ஏச்சும் உனக்கு புகழ்ச்சிதானே!

vgovindan
Posts: 1937
Joined: 07 Nov 2010, 20:01

தெளிவு

Post by vgovindan »

வாழ்க்கையின் வினோதங்களை
வருணிக்கத்தான் இயலுமோ?
உலகத்தை உய்விக்கும் காசி
விசாலாட்சி, விசுவநாதரே!

உலகெங்கிலிருந்தும், மக்கள்
உம்மைக்கண்டு, உய்வு பெற
உனதூர் வந்து குழுமியிருந்திட,
உன்னூரிலேயே பிறந்து, வளர்ந்து,

ஊர்தி ஓட்டிப் பிழைப்பவன் ஒருவன்,
ஊழ்வினை தீர்க்கும், உமது சன்னிதி,
இதுநாள்வரை சேரந்திலானாம்.
உண்மையாயிருக்குமா என நான் வியந்திட,

இறைவன் கூறிய சொல் என்னை
இன்னும் வியப்பிலாழ்த்தியதே!
மூடனே, காசியில் பிறந்து வாழும்
அனைத்து மக்களென்ன, மிருகங்களும்,

கங்கை நீரினிலே உயிர்வாழ் மீனினமும் கூட,
அனைத்துயிரும் நானேயடா, அறிவிலீ!
உன்னைப்போல் உலகிலே வழிதவறி,
மயங்கி உழன்றிடுவோர்தம்மை

வழி நடத்திடவே, அத்தனை உருவிலும்
வாழ்ந்திடுகின்றேனே, அறிவாய்!

vgovindan
Posts: 1937
Joined: 07 Nov 2010, 20:01

நாசியினுக்கோர் முறையீடு

Post by vgovindan »

அனைத்துலகினரும் உய்ந்திடவேண்டி,
அரவணிவோன் தலைமுடியினின்று
இரங்கிவந்து, இப்புண்ணிய பூமியிலே
இனிதே தவழ்ந்திடும், கங்கையம்மா!

உனது புனித நீரினில் நீராடி, உய்ந்திட
உனது கரையினில் நான் நடக்கையில்,
கழிவு நீர் வாய்க்காலொன்று உன்னில்
கலந்திடுவதைக் கண்டு, ஓர் நொடி,

அருவருப்புடன் நோக்கி நின்றிட,
அடுத்த நொடி, உதித்ததோர் எண்ணம்;
இங்கோர் சாக்கடை, சமுசாரமெனும்
இழிந்த கழிநீரையேந்திச் செல்லுதேயென;

உண்மை; தன்னுள்ளே, தாளவியலாத
நாற்றங்களை ஏந்திக்கொண்டு,
நாலுபேருக்கு முன், மணமுள்ள வாசனை
திரவியங்களையணிந்து, ஊரை ஏமாற்றி,

சிங்காரமாக ஆடைகளிந்து, ஆணவம்
தலைவிரித்தாட, ஆடம்பர வாழ்க்கை
நடாத்தும், ஊன் நாராகப் போய்க்கொண்டிருக்கும்,
நீதானடா உண்மை கழிநீர் சாக்கடை.

இறைவனெனும் கங்கையை நோக்கி
இன்றே பயணித்து, அவனுடன் கலந்து,
அந்த கங்கையே நீயுமாகி நிலைத்திட,
நாசியினை சற்று உள்நோக்கச் செய்து, உய்ந்திடுவாயே!

vgovindan
Posts: 1937
Joined: 07 Nov 2010, 20:01

Re உய்யும் வழி

Post by vgovindan »

மரியாதை புருஷோத்தமா, இராமா!
உனக்கு அந்தப் பெயரேன் வந்ததென
உலகோர் உணரத்தவறிவிட்டனரே, அந்தோ!
ஊருக்கு உபதேசம் செய்வோர் நிறைந்த இந்த
உலகினிலே, தருமத்திற்கோர் இலக்கணமே!
உன்னைப் புகழ்ந்தேத்தும் பாட்டுப் புலவர்கள்
உன் பிறந்த நாளாகிய இன்றைய ஒரு நாளாகிலும்
உன் கடமை உணர்வினைக்
கடைபிடிக்க விழைவரோ, ஐயமே!
வாழ்க்கை வாழும் முறையெதுவென
வாழ்ந்து காட்டிய, தசரதன் வழித்தோன்றலே!
வாழ்நாள் முழுதும் அயர்வின்றி உழைத்து,
உழைப்பின் பயனைச் சற்றேனும் விழையாது,
உன்னைக் குற்றம் கூறிட்ட ஊராரையும்
உன் பிள்ளைகள் போல் நடத்தி, ஆனால்,
உன்னுணர்வில் கலந்திட்ட உனதருமை மனைவியை
கானகம் ஏகச்செய்த கடமைச் செம்மலே!
உன்னைப் போற்றுதற்கு மொழிகளேதும் தோன்றாது,
உன்னை உள்ளத்தில் வழிபட்டேன், உய்வித்திடுவாயே.

vgovindan
Posts: 1937
Joined: 07 Nov 2010, 20:01

அபஸ்வரம்

Post by vgovindan »

குழலூதும் கண்ணன், தன் இன்னிசையினை,
அன்றுதொட்டு இன்றுவரை, நிறுத்தியதேயில்லை;
ஆயின், அவன் போலியொருவன், தீய நட்பினால்,
அவனைப்போல் இசைப்பதாக எண்ணிக்கொண்டு,
அபஸ்வராமாகவே இசைக்கின்றானே, இக்குழலை!
இந்தப் போலியை வென்று, அசல் இசையினை, என்று இக்குழலில் ஒலிக்கப்பெறுவேனோ?
கண்ணா! போதும், போதும்; மறுபடிஉன்னிசை
இக்குழலில் ஒலித்திடச் செய்வதுன் கடமை, தாமதிக்காதே.

போலி - பௌண்ட்ரக வாஸுதேவன்

vgovindan
Posts: 1937
Joined: 07 Nov 2010, 20:01

சிட்டுக்குருவி

Post by vgovindan »

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி,
சேதி தெரியுமா?

https://youtu.be/6QopkzrE_hk?si=3zKXpL5W619qup3N

சிட்டுக்குருவி!
உன் இனம் மறைந்துபோகும் கதை
உன்னிடம் நான் சொல்லிட எண்ணி,
உனது உற்றார் உறவினர் யாரேனும்
உளரோ இங்கேயெனத் தேடிக் களைத்தேனே;
வீட்டுக்கு வீடு, நாள் முழுதும் உனது
இனத்தாரின் இனிய குரல் கேட்டிருந்தோமே அன்று;
இன்று உங்களில் ஒருவரையேனும் காண்டல்
அரிதாகியதெங்ஙனமோ!

இத்தகைய முடிவை நோக்கி எங்கள்
மனித இனமும் விரைகின்றதோயென்ற
எனது அச்சத்தினை பகிர்ந்துகொள்ள
விழைந்தேனே; எங்கே நீ?

vgovindan
Posts: 1937
Joined: 07 Nov 2010, 20:01

யாரே, நீ!

Post by vgovindan »

இறைவா,
உன்னை ஒருவன் சிவன் என்கின்றான்;
மற்றவன் விஷ்ணு என்கின்றான்;
அடுத்தவன் முருகன் என்கின்றான்;
பரமன் என, சக்தியென, எத்தனை பெயர்கள்!
இந்நாட்டிலேயே, புத்த மதத்தவரும், ஜைனரும் உன்னை சூன்னியமென்பரே!
அயல் நாட்டவரோ, உன்னை அல்லாவென, இயேசு என இன்னும்
எத்தனையோ பெயரிட்டு அழைப்பரே!
நாத்திகன் நீ இல்லவேயில்லை என்கின்றான்.
இத்தனை கோடி மக்களுக்கும் தந்தை நீயொருவனே; அல்லது நீ தாய்தானோ?
உயிரினங்களும் தாவரங்களும் உன் படைப்பே;
இல்வுயிரினங்கள் உன்னை வழிபடுவதில்லை;
அதனால் அவற்றை நீ பேணாமலிருக்கவில்லை;
வானமென, பூமியென, சூரிய, சந்திரனென,
கோள்களென, நட்சத்திர மண்டலங்களென,
இத்துணை இயற்கையின் வடிவங்களும் நீயேயன்றோ!
உனது தொடக்கமும் முடிவும் எஃதென யாரே அறியவல்லார்!
இத்தகு, விவரிக்க இயலாத உன்னை,
எந்த மொழியிலே வருணிப்பேனய்யா?
மொழியனைத்தும், மொழிக்கு மூலமான
ஒலியனைத்தும், உயிரினங்களின் குரலனைத்தும்,
மனிதன் மெய்ம்மறந்து பாடும் இசையனைத்தும்
மனிதனின் அறிவனைத்தும் உன்னிசைவினாலன்றோ!
உன்னை எங்கு, எதனில் தேடுவேன்?
என் புலன்களின் அறிவும் நீயே!
என் இதயத்துடிப்பும், இவ்வுயிரின் இயக்கமும் நீயே!
எப்படி விளிப்பேன் உன்னை? தந்தையேயென்றா, தாயேயென்றா?
சொல்லிழந்து, செய்வதறியாது மலைத்தேன் ஐயா!
உன்னைக் காண எங்கும் நானேன் செல்ல?
இதோ, இங்கே, இப்போதே எங்கு நோக்கினும்
நான் காண்பது உன்னை, கேட்பது உன் குரலை!
போதுமய்யா, போதும்; இவ்வுயிர் குலையுமுன் உனது திருவடி சேர்த்திடுவாயே!

Post Reply